
‘பிரபாகரனுக்கு பின்னர் ஓர் இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்துவது திருமா மட்டுமே’ என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு, இயக்குனர் பாரதிராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் பேரவை சார்பில் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரபலங்களின் மத்தியில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர் தொல்.திருமாவளவனை பாராட்டி பேசுகையில், "நான் பொதுவாக அரசியல் மேடையில் பங்கேற்பது இல்லை. திருமாவை அதிகம் நேசிக்கின்ற காரணத்தினால் தான் இங்கே வந்துள்ளேன். உடல்நிலை சரியில்லை என்றபோதும் அடம்பிடித்து வந்திருக்கிறேன்.
நான் சிறுவயதிலிருந்து கை சுத்தமான அரசியல்வாதிகளை நேசிப்பதுண்டு. காமராஜர், கக்கன், ஜீவா இவர்களின் வரிசையில் தொடர்ந்து கை சுத்தமான அரசியல்வாதி திருமாவளவன்!
திருமா முகத்திற்கு அழகு, அவர் கொண்டுள்ள கம்பீரமான மீசை தான். அவருடைய சிரிப்பு என்பது கூடுதல் அழகு. நான் சோகமாக இருக்கும் போதெல்லாம் திருமாவின் மீசையை பார்த்தால் தைரியம் வந்துவிடும். பிரபாகரனுக்கு பிறகு ஒரு இயக்கத்தை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர் திருமாவளவன் தான்.
யார் மனதையும் புண்படாத வகையில் பேசக்கூடிய ஒரு நல்ல அரசியல்வாதி திருமா. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராக திருமா இருக்கலாம். ஆனால், எங்களை போன்றவர்களுக்கு அவர் பொதுவானவர்!
நீங்கள் எல்லாம் சனாதனத்தை வார்த்தைகளால் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் திருமா அதனை கொள்கை ரீதியாக எதிர்த்துக்கொண்டு களத்தில் நிற்கிறார். நான் பல தலைவர்கள் பேசுவதை பார்த்து இருக்கிறேன். ஆனால் மேடையில் கர்ஜித்துக் கொண்டிருப்பவர் திருமா.
நான் திருமாவின் முதல் பேச்சை கேட்கும்போதே அதிர்ந்து போனேன். யார் இவர் என்று அப்போதே தேட தொடங்கினேன். எங்களைப் போன்றவர்கள் எல்லாம் சிலவற்றை வெளிப்படையாக பேச முடியாது. நாங்கள் நினைப்பதெல்லாம் அவர் பேசிக்கொண்டு இருக்கிறார் என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்.
எனக்கு வயது 83 ஆகிவிட்டது, திருமா என்னையும் கடந்து, நூறாண்டுகள் வாழ்ந்து இந்த சமூகத்திற்காக பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட கலைத்துறையின் சார்பில் திருமாவுக்கு பாராட்டு விழா எடுக்க விரும்புகிறேன். பார்ப்போம்" என்று பாரதிராஜா பேசினார்.