சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை: உறுதியளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!

சிங்கப்பூரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
சிங்கப்பூரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை: உறுதியளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!

சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 23-ம் தேதி சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.

சிங்கப்பூரில் Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களையும், அந்த நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனையும் நேற்று சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்த்திடும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக இன்று ( மே 25) சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

அப்போது சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே.சண்முகம், சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை தொடங்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின், சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு ஜப்பான் செல்ல உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in