திண்டுக்கலில் ஜெயிலர் படம் வெளியாக உள்ள தியேட்டரில் கூடுதல் டிக்கெட் கேட்டு தகராறில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ஜெயிலார். இந்த திரைப்படம் நாளை மறுநாள் உலகெங்கிலும் வெளியாக உள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் ரஜினியின் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ஜெயிலர் என்பதால் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்திற்கான திரையரங்க டிக்கெட்டுகளை பெற ஆன்லைன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களுக்கு ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்களும் படையெடுத்து வருகின்றனர்.
இதே போல் திண்டுக்கல்லில் உள்ள ராஜேந்திரா மற்றும் உமா திரையரங்குகளில் ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இதையொட்டி அங்கும் ரஜினி ரசிகர்கள் ஆன்லைன் டிக்கெட்டினை பெற முண்டியடித்து வருகின்றனர். இதில் தியேட்டர் மேலாளரிடம் கூடுதல் டிக்கெட் கேட்டு தாக்குதல் நடத்திய சம்பவமும் அரங்கேறியுள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்த ரஜினி ரசிகர்களான நந்தவனப் பட்டி கண்ணன் மற்றும் நெட்டு தெருவை சேர்ந்த ஜோசப் ஆகிய இருவரும் தியேட்டர் மேலாளரான மாயாண்டியிடம் கூடுதல் டிக்கெட் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். கூடுதல் டிக்கெட் தர மாயாண்டி மறுக்கவே அவரை தாக்கிய இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதையடுத்து காதில் காயம் அடைந்த மாயாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கண்ணன், ஜோசப் ஆகிய இருவர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கபட்டுள்ளது.