மாமனாரின் சொந்தத் தொகுதியில் மருமகள்: மைன்புரி இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவின் வியூகம் என்ன?

மாமனாரின் சொந்தத் தொகுதியில் மருமகள்: மைன்புரி இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவின் வியூகம் என்ன?

மைன்புரி மக்களவை இடைத்தேர்தலில் தனது மனைவி டிம்பிள் யாதவை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறார் உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ்.

சமாஜ்வாதி கட்சி நிறுவனரும் முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ், அக்டோபர் 10-ம் தேதி காலமானார். இதையடுத்து, அவரது மைன்புரி மக்களவைத் தொகுதி காலியானது. அந்தத் தொகுதிக்கு, டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தச் சூழலில், தந்தையின் சொந்தத் தொகுதியில் தனது மனைவி டிம்பிள் யாதவை நிறுத்துகிறார் அகிலேஷ். இதில் பல அரசியல் கணக்குகள் இருக்கின்றன.

முதலாவதாக, சமாஜ்வாதி கட்சியின் செல்வாக்கு நிறைந்த ஆஸம்கர் மற்றும் ராம்பூர் தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் பாஜக வென்றது அகிலேஷ் யாதவுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சமாஜ்வாதி கட்சியின் வாக்குவங்கியான யாதவ் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள மைன்புரி தொகுதியைத் தக்கவைப்பது அவருக்கு ஒரு சவாலாக உருவெடுத்தது. முலாயம் சிங் யாதவ் பல முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி என்பதால் மைன்புரி கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், குடும்பப் பிரச்சினைகள் காரணமாகவும் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறார் அகிலேஷ். முலாயம் சிங் யாதவின் தம்பியான ஷிவ்பால் யாதவ் அவ்வப்போது குடைச்சல் கொடுத்துவந்தார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் சமாஜ்வாதி கட்சியில் அவர் ஓரங்கட்டப்படுவதாகப் பேச்சுக்கள் எழுந்தன. இதையடுத்து அக்கட்சியிலிருந்து வெளியேறி பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சியைத் தொடங்கினார். தனது அண்ணனின் சொந்தத் தொகுதியில் போட்டியிட அவர் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மைன்புரி தொகுதியின் முன்னாள் எம்.பி-யும் முலாயம் சிங் யாதவின் உறவினருமான தேஜ் பிரதாப் யாதவ் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவர் போட்டியிட்டால், முலாயம் சிங் யாதவின் குடும்பத்தினரில் சிலரே அவருக்கு எதிராகச் செயல்படுவார்கள் எனக் கட்சித் தலைமை கருதியது. எனவே, அந்தச் சவாலை முறியடிக்க டிம்பிள் யாதவைக் களமிறக்குவதே சரி எனத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இதில் இன்னொரு சுவாரசியமும் இருக்கிறது. முலாயம் சிங் யாதவின் இன்னொரு மருமகளான அபர்ணா யாதவ் (அவரது இரண்டாவது மனைவிக்குப் பிறந்த மகனான பிரதீக் யாதவின் மனைவி), கடந்த ஜனவரி மாதம் பாஜகவில் இணைந்தார். மைன்புரி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட அவர் விரும்புகிறார். இதுதொடர்பாக, உத்தர பிரதேச பாஜக தலைவர் பூபேந்திர செளத்ரியைச் சந்தித்து அவர் பேசியிருக்கிறார்.

இப்படியான சூழலில்தான், தனது மனைவி டிம்பிள் யாதவை மைன்புரி தொகுதியின் வேட்பாளராகக் களமிறக்குகிறார் அகிலேஷ் யாதவ்.

2019 மக்களவைத் தேர்தலில், மைன்புரி தொகுதியில் பாஜகவின் சார்பில் போட்டியிட்ட பிரேம் சிங் சாக்யாவுக்கு 44 சதவீத வாக்குகள் கிடைத்தன. முலாயம் சிங் 97,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தாலும் முந்தைய தேர்தலை ஒப்பிட 10 சதவீத வாக்குகளை சமாஜ்வாதி கட்சி இழந்திருந்தது.

செல்வாக்கு மிக்க முலாயம் சிங் யாதவுக்கே சவால் ஏற்படுத்திய பாஜக, இந்த முறை வெற்றி பெற தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பதால், டிம்பிள் யாதவை வெற்றிபெற வைப்பது அகிலேஷ் யாதவின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான சவாலாக உருவெடுத்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in