"மாட்டிறைச்சி உண்பதை சாவர்க்கர் பிரச்சினையாகக் கருதவில்லை!"

இந்துத்துவ அரசியலை விமர்சித்த திக்விஜய் சிங்
"மாட்டிறைச்சி உண்பதை சாவர்க்கர் பிரச்சினையாகக் கருதவில்லை!"
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்

2024-ல் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், அரசமைப்புச் சட்டத்தை மாற்றி, இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியிருக்கிறார்.

மத்திய பிரதேசத் தலைநகர் போபாலில் இன்று (டிச.25) நடந்த ஜன் ஜாக்ரண் அப்யான் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய திக் விஜய் சிங், “ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு எதிராக காங்கிரஸ் போராடிவருகிறது” என்று குறிப்பிட்டார்.

மேலும், “இந்துயிஸத்துக்கும் இந்துத்துவத்துக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என சாவர்க்கரே தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். பசுவை ‘தாய்’ என அவர் ஒருபோதும் கருதியதில்லை. மாட்டிறைச்சி உண்பதையும் அவர் பிரச்சினையாகக் கருதவில்லை. 2024-ல் பாஜக ஆட்சிக்கு வந்தால், முதல் வேலையாக அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தும். பின்னர் இடஒதுக்கீட்டை ரத்துசெய்துவிடும். ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் ‘மாட’லை பாஜக அரசு பின்பற்றுகிறது. நாட்டில் இன்று 10 அல்லது 15 பேர்தான் தொழில் துறையில் முன்னணியில் இருக்கிறார்கள். கரோனாவின் பெயராலும் தொழில் நடக்கிறது” என்று அவர் கூறினார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

“இந்தியாவில் இப்போது நடைபெறும் போட்டி இந்துவுக்கும், இந்துத்துவவாதிக்கும் இடையிலானது. ஒருபுறம் அன்பைப் பரப்பும் இந்துக்களும், இன்னொரு புறம் பதவியைக் கைக்கொள்ள வெறுப்பைப் பரப்பும் இந்துத்துவவாதிகளும் இருக்கின்றனர்” என சமீபத்தில் ராகுல் காந்தி பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், திக்விஜய் சிங்கும் இந்துத்துவத்தை விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு பொருளாதாரத்தைக் கையாள்வதில் தவறு செய்துவிட்டதாகக் கூறி, அதைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், நவம்பர் 14 முதல் ‘ஜன் ஜாக்ரண் அப்யான்’ எனும் பெயரில் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.