`டிஜிட்டல் ரூபாயால் பணம் கொள்ளை போகுதல் குறையும்'- தொழில்முனைவோர்கள் நம்பிக்கை

`டிஜிட்டல் ரூபாயால் பணம் கொள்ளை போகுதல் குறையும்'- தொழில்முனைவோர்கள் நம்பிக்கை

டிஜிட்டல் ரூபாய்கள் மூலம் வரி ஏய்ப்பு, பணம் கொள்ளை போகுதல் குறையும் என்றும் கிரிப்டோகரன்சி, பிட்காயின்களில் முதலீடு செய்வோர் குறைந்து நேரடியாக அரசு டிஜிட்டல் ரூபாய்களில் முதலீடு செய்வார்கள் என்றும் தொழில்முனைவோர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்திய ரிசர்வ் வங்கியின் கிளை அமைப்பான சென்டரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (CBDC) அமைப்பு, ரீடைல் டிஜிட்டல் ரூபாய்களை உருவாக்கி இந்தியாவில் முதல் கட்டமாக நான்கு நகரங்களில் டிஜிட்டல் ரூபாய்களை வெளியிட்டு சோதனை செய்துள்ளது. ரீடைல் டிஜிட்டல் ரூபாய் முதல் சோதனை திட்டத்தில் மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி மற்றும் ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி ஆகிய 4 வங்கிகள் இடையில் பணப் பரிமாற்றம், வரவு கணக்குகளின் பதிவு ஆகியவை செயல்படுத்தப்பட்டன.

கடந்த நவம்பர் 1-ம் தேதி சென்டரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி அமைப்பு ஹோல்சேல் டிஜிட்டல் ரூபாயை சோதனை செய்த நிலையில், மக்கள் பயன்படுத்தும் ரீடைல் டிஜிட்டல் ரூபாயை சோதனை செய்துள்ளது. இந்திய ரூபாய்க்கு ₹ என்ற குறியீடு உள்ளது. அதேபோல் டிஜிட்டல் ரூபாய்க்கு e₹ என்ற குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரீடைல் டிஜிட்டல் ரூபாய் ஒரு டோக்கன் போல இயங்கும், மக்கள் டிஜிட்டல் ரூபாய் வாயிலான பணப் பரிமாற்றத்தை வங்கிகள் அளிக்கும் டிஜிட்டல் வேலெட் வாயிலாகச் செலுத்தலாம். அதே போல் டிஜிட்டல் வேலெட் வாயிலாக பெறவும் முடியும். தற்போது பயன்பாட்டில் உள்ள 1, 2, 5, 10, 20, 50, 100, 500, 2000 ரூபாய் மதிப்பீட்டில் டோக்கன் உருவாக்கப்பட்டு அதை வங்கிகளின் வாயிலாகப் பரிமாற்றம் செய்யப்படும். நான்கு நகரத்தில் வாடிக்கையாளர், விற்பனையாளர்கள் அடங்கிய வட்டம் தேர்வு செய்யப்பட்ட அந்த வட்டத்திற்குள் ரீடைல் டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்திச் சோதனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தற்போது இதை பயன்படுத்த இயலாது.

இதுகுறித்து பொதுத்துறை வங்கி ஊழியர் ஒருவர் கூறுகையில், "தற்போது டிஜிட்டல் ரூபாய்க்கு தேர்வு செய்யப்பட்ட வங்கிகளில் உள்ள வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை டிஜிட்டல் ரூபாய் வேலெட்க்கு மாற்றாலம். டிஜிட்டல் ரூபாய் சேவையை பெற்றுள்ள அனைத்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் ரூபாய் வேலெட் சேவையை அளிக்கும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் ரூபாயை பெற முடியும்.

ரீடைல் டிஜிட்டல் ரூபாயின் முதல் சோதனை திட்டத்தைப் பொறுத்து இரண்டாவது கட்ட சோதனையில் அகமதாபாத், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா மற்றும் சிம்லா ஆகிய நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மேலும் இச்சோதனையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி மற்றும் ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கிகள் உடன் பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கிகளும் பங்கேற்கின்றன. இச்சோதனைகள் வெற்றியடையும் பட்சத்தில் நாடு முழுவதும் டிஜிட்டல் ரூபாய்களை அனைத்து நகரங்களிலும் மக்களுக்கு அறிமுகம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது" என்றார்.

டிஜிட்டல் ரூபாய்கள் மூலம் வரி ஏய்ப்பு, பணம் கொள்ளை போகுதல் போன்ற பிரச்சினைகள் குறையும். அரசுக்கு வருவாய் கிடைப்பதால் பல்வேறு நிதியுதவி திட்டங்கள் சிறப்பாக மேற்கொள்ள தேவையான நிதிகள் கிடைக்கும். இதன் மூலம் தொழிற்துறை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கோவை கொடிசியா முன்னாள் தலைவர் ரமேஷ் பாபு கூறுகையில், "டிஜிட்டல் ரூபாய்கள் அறிமுகம் வரவேற்கதக்கது. இதன் மூலம் ரூபாய் நோட்டுகளை நாம் நேரடியாக உபயோகப்படுத்துவது தவிர்க்கப்படும். அனைத்து பணப்பரிமாற்றங்களும் வங்கிகள் மூலமாக நடைபெறும். இதன் மூலம் வருமான வரி ஏய்ப்பு, கருப்பு பணங்கள், தவறான பணப்பரிமாற்றங்கள், கணக்கில் வராத பணப்பரிமாற்றங்கள் தவிர்க்கப்படும். இன்னும் ஐந்து ஆண்டுகளில் டிஜிட்டல் ரூபாய்கள் அனைவராலும் உபயோகப்படுத்தும் நிலை வரும். அப்படி வரும் பட்சத்தில் வருமான வரிக்கு பதிலாக பணப்பரிமாற்ற வரி திட்டம் கொண்டுவரப்படலாம். இதன் மூலம் அனைவருமே நேரடியாக நாட்டிற்கு வரி செலுத்துவோம். இதனால் நிதியுதவி திட்டங்களுக்கு நிதி கிடைக்கும். டிஜிட்டல் ரூபாய்களை வெளிநாடுகளும் ஏற்கும் பட்சத்தில் தொழிற் ரீதியிலான வர்த்தகங்கள் விரிவடையும். நம் நாட்டிற்கு அதிக தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய்களை இந்திய ரிசர்வ் வங்கியே வெளியிடுகிறது. தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால் கள்ள சந்தைகளில் உபயோகிக்கப்படும் கிரிப்டோகரன்சி, பிட்காயின் போன்றவைளில் முதலீடு செய்வோர் குறைந்து நேரடியாக அரசு டிஜிட்டல் ரூபாய்களில் முதலீடு செய்வார்கள். மேலும் அரசுக்கு ரூபாய் அச்சடிப்பது செலவும் குறையும். அதே போல் ரூபாய் மதிப்பும் கூடும். பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும். விலை வாசி குறையவும் வாய்ப்புள்ளது" என்றார்.

டிஜிட்டல் ரூபாய்கள் வருகையால் எதிர்காலத்தில் தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், வரி ஏய்ப்பு, வங்கியில் கடன் பெற்று ஏமாற்றுவது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in