காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் என்ஐஏ உதவி தேவைப்படவில்லை: ஆய்வுக்குப் பின் டிஐஜி சைலேந்திரபாபு பேட்டி

காரில் சிலிண்டர்  வெடித்த வழக்கில் என்ஐஏ உதவி தேவைப்படவில்லை: ஆய்வுக்குப் பின் டிஐஜி சைலேந்திரபாபு பேட்டி

கோவை உக்கடத்தில் காரில் சிலிண்டர் வெடித்ததாக கூறப்படும் இடத்தில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு,  கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,  உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே இன்று அதிகாலை மாருதி கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியது.  காரில் உள்ள சிலிண்டர் வெடித்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில் அது சிலிண்டர் வெடிகுண்டாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது. 

அதனையடுத்து தடயவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் காரை தீவிரமாக சோதனையிட்டனர். உக்கடம் பகுதி  இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் மேலும் பதற்றம் அதிகரிக்காமல் இருக்க அங்கு வெளி  மாவட்டங்களில் இருந்து போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் வைப்பதற்காக தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு சென்னையிலிருந்து கிளம்பி கோவைக்கு வந்தார்.

கார் சிலிண்டர் வெடித்ததாக கூறப்படும் இடத்தில் உருக்குலைந்து  கிடந்த காரை காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு,  கோவை ஐஜி சுதாகர்,  கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன்,  கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உளவுத்துறை ஐ.ஜி  செந்தில்வேலன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

இதன் பின் சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோவையில் இன்று காலை நடந்த சம்பவம் குறித்த புலன்விசாரணை கோவை மாவட்ட காவல்துறை விசாரித்து வருகிறது. மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது. தடய அறிவியல் துறையைச் சேர்ந்த முழு குழுவினரும், விபத்து நிகழ்ந்த இடத்தில் தடயங்களை சேகரித்து வருகின்றனர். சென்னையில் இருந்து தடய அறிவியல் துறையின் இயக்குநரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். தடயங்களைச் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

கோவையில் இருக்கக்கூடிய வெடிகுண்டு நிபுணர் குழுவினரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு கமாண்டோ பிரிவைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்களும் விமானத்தில் இங்கு வந்துள்ளனர். போலீஸ் மோப்ப நாய் விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

காரில் இருந்த சிலிண்டர் வெடித்துள்ளது. சிலிண்டர் எங்கு வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். காரின் உரிமையாளர்கள் குறித்தும், இறந்த நபர் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். காவல்துறை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். விசாரணையின் முடிவில்தான் மற்ற விவரங்களை கூற முடியும்.

தற்போதைக்கு இந்த சம்பவம் குறித்து விசாரிக்க என்ஐஏ உதவி தேவைப்படவில்லை. புலன்விசாரணையில் அதுபோன்று ஏதாவது தென்பட்டால்தான் அதுகுறித்து சொல்லப்படும்" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in