
சென்னையில் பெருகி வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இறந்தவர்களின் உடலை நீண்ட நேரம் வைத்திருப்பதில் சிரமம் ஏற்படுவதால் சென்னை மாநகராட்சி சார்பில் பிணவறை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இருப்பிடங்களும் பெருக வேண்டிய தேவை எழுந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பர்களுக்கு, அங்கு செயல்பட்டு வரும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் பல்வேறு கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை விதிக்கிறது.
இதில் குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஏதாவது ஒரு வீட்டில் மரணம் ஏற்பட்டால், இறந்தவரின் உடலை நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டியிருப்பின் அதற்கு, பெரும்பாலான குடியிருப்போர் நலச் சங்கங்கள் அனுமதிப்பது இல்லை.
குறிப்பாக இறந்தவரின் உறவினர் மற்றும் வாரிசுகள் வெளியிடங்களில் இருந்து திரும்பும்வரை, சடலத்தை வீட்டிலேயே வைத்திருப்பதற்கு அடுக்ககங்கள் அதிருப்தி தெரிவிக்கின்றன. இதனால் வீண் சச்சரவுகள் ஏற்படுகின்றன. இது தொடர்பாக மாநகராட்சிக்கு என தனியாக பிணவறை கோரிக்கையை பலரும் விடுத்திருந்த நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை மாநகராட்சி புதிய முடிவு கண்டுள்ளது.
அதன்படி சென்னை அண்ணா நகரில் உள்ள வேலங்காடு மின்மயானத்தில் பிணவறை ஒன்றை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஒரே நேரத்தில் 8 முதல் 10 உடல்களை பாதுகாத்து வைக்கும் வகையில், இந்த பிணவறை அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை பயன்பாட்டுக்கு வரும்போது அடுக்ககங்கள் எதிர்நோக்கும் பெரும் நடைமுறைச் சிக்கல் களைய வாய்ப்பாகும்.