
பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுத்திறன் பயிற்றுநர்கள் சங்கத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் இன்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட பத்துக்கும் மேற்பட்ட பயிற்றுநர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்றுநர்கள் கூறுகையில், ‘’ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் நாங்கள் எங்கு இருக்கோம் என்பது தெரியவில்லை. சாதாரண மாணவர்களுக்கே கல்வி பயிற்றுவிப்பது பெரியது. அதை விட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிப்பது கடினம். எங்களைப்பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதற்கான பணி ஆணையை உடனடியாக வழங்க வேண்டும். ஆனால், வாய்மொழி உத்தரவு மட்டுமே பிறப்பிக்கப்படுகிறது. எனவே, திமுக அரசு எங்கள் மீது கருணை காட்ட வேண்டும்'’ என அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.