இந்தியாவில் 33 ஆயிரம் கோடீஸ்வரர்கள் : ஏழை, பணக்காரர் ஏற்றத்தாழ்வு உச்சம்!

இந்தியாவில் 33 ஆயிரம் கோடீஸ்வரர்கள் : ஏழை, பணக்காரர் ஏற்றத்தாழ்வு உச்சம்!

இந்தியாவின் முதல் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை, அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் வெளியிடுவது வழக்கம். கடந்த மாதம் வெளியான இந்தப் பட்டியலில், தொடர்ந்து 14-வது ஆண்டாக தொழில் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்தார் என்பதையும் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்தவர்கள் குறித்துப் பலரும் அறிவர்.

இந்நிலையில், உலகளாவிய கோடீஸ்வரர்கள் குறித்த தகவல்களை உற்றுநோக்கும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ’புதிய உலக செல்வம்’ நிறுவனம், இந்தியாவின் பணக்கார நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் எதிர்பார்த்ததுபோல மும்பை முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்து தேசத்தின் தலைநகரம் டெல்லி உள்ளது. 3-வது இடத்தில் பெங்களூரு, 4-வது இடத்தில் கொல்கத்தா உள்ளன. முதல் 3 பெருநகரங்களும் ஒட்டுமொத்த வளங்களின் அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றன.

அதுவே, கொல்கத்தாவில் தனிநபர்களின் சொத்துக் கணக்கே நகரத்தின் செல்வத்தை நிர்ணயிப்பதாக உள்ளது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதவிர, இந்தியாவில் மொத்தம் 33 ஆயிரம் கோடீஸ்வரர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் மிகவும் ஏழையாக அறியப்படுபவரிடம் குறைந்தது ரூ.7 கோடி 40 லட்சம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவர்களில் 21 ஆயிரம் பேரிடம் ரூ.74 கோடி, 1,074 பேரிடம் ரூ.739 கோடி 54 லட்சம், 120 பேரிடம் ரூ.74,000 கோடி குறைந்தபட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

138 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவிலோ 48 சதவீத வளங்களை மொத்தமே 33 ஆயிரம் பேர் கையகப்படுத்தியிருப்பது, இங்கு நிலவும் படுபயங்கரமான பாகுபாட்டைப் போட்டுடைக்கிறது.

மற்ற எல்லா நாடுகளைவிடவும் இந்தியாவில்தான் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளதாம். அப்படியெனில் ஏழை, பணக்காரர் ஏற்றத்தாழ்வு மிக அதிகமாக இருக்கும் நாடும் இந்தியாதான். இந்த ஆய்வு மேலும் ஒரு உண்மையைச் சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு நாட்டின் 40 சதவீதத்துக்கும் அதிகமாக வளம் மிகக் குறைந்தவர்களிடம் குவிந்திருக்கிறது என்றால், அந்த நாட்டில் நடுத்தரவர்க்கத்தினருக்கான வாழ்விடம் சுருங்கிக்கொண்டே போகிறது என்று பொருள். அந்த வகையில், பொருளாதார சமநிலை ஓரளவு நீடிக்கும் நாடாக ஜப்பான் விளங்குவதாகவும் இந்த ஆய்வு எடுத்துச்சொல்கிறது. ஜப்பானின் வளத்தில், 24 சதவீதத்தை மட்டுமே பெரும் பணக்காரர்கள் கையகப்படுத்தி இருப்பதாக நிரூபணங்களுடன் காட்டுகிறது. ஆனால்,138 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவிலோ 48 சதவீத வளங்களை மொத்தமே 33 ஆயிரம் பேர் கையகப்படுத்தியிருப்பது, இங்கு நிலவும் படுபயங்கரமான பாகுபாட்டைப் போட்டுடைக்கிறது.

இப்படி, மலைக்கும் பாதாளத்துக்குமான இடைவெளியாகப் பொருளாதார அசமத்துவம் இந்தியாவில் ஏற்பட, உலகமயமாக்கலும் தொழில்நுட்ப வளர்ச்சியும் மூல காரணங்களாகப் பொருளாதார அறிஞர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. உலகமயமாக்கலினால் சந்தை திறக்கப்பட்டு வாய்ப்புகள் அதிகரித்தாலும் அது எல்லோருக்குமானதாக இல்லை. ஏற்கெனவே, வளங்கள் கொழித்தவர்கள்தாம் ஏணிப்படியில் மேலே மேலே ஏற வழிவகுத்தது.

இதனால் சாதியப் பொருளாதார அடுக்கில், ஏற்கெனவே அடித்தளத்தில் அழுத்தி வைக்கப்பட்ட மக்களை மேலும் உலகமயமாக்கல் பின்னுக்குத் தள்ளியது. உள்ளூர் பெட்டிக்கடை வியாபாரியிலிருந்து சிறிய சிகை அலங்கார நிலைய தொழிலாளரின் நிலைவரை, இதில் பொருத்திப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம். மறுபுறம் தொழில்நுட்ப வளர்ச்சி அதை பயன்படுத்தத் தெரியாதவர்களைப் பொருளாதார சந்தையிலிருந்து அப்புறப்படுத்துகிறது. இருக்கும் இடத்தில் இருந்தே உணவுப் பண்டங்கள், ஆடை உள்ளிட்ட பொருட்களை வாங்குதல், போக்குவரத்து வாகனத்தில் பயணம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைன் செயலிகள் வந்து விட்டத்தை இங்கு தொடர்புபடுத்திப் புரிந்து கொள்ளலாம். அது மட்டுமின்றி, இயந்திரங்கள் பல ஊழியர்களின் பணியிடத்தை அபகரிக்கவே பயன்படுகிறது.

Related Stories

No stories found.