தவறான ஊசி செலுத்தியதால் மாணவி உயிரிழந்தாரா?: தனியார் மருத்துவமனை மீது புகார்

தவறான ஊசி செலுத்தியதால்  மாணவி உயிரிழந்தாரா?: தனியார் மருத்துவமனை மீது புகார்

வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி தவறான ஊசி செலுத்தியதால் உயிரிழந்தார் என்று அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி வசந்தி. இவர்களது மகள் நந்தினி(15) தனியார் பள்ளியில் 10- ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வயிற்றுவலி காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நந்தினி அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் அல்சர் இருப்பதைக் கண்டுபிடித்து பெற்றோரிடம் தெரிவித்துடன் அதற்கான சிகிச்சை அளித்து வந்தனர்.

நந்தினி.
நந்தினி.

நேற்று இரவு மருத்துவர்கள் நந்தினிக்கு ஊசி ஒன்று செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் திடீரென நந்தினியின் உடல்நிலைப் பாதிக்கப்பட்டதால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார். இந்த தகவலையறிந்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த வடக்கு கடற்கரை போலீஸார், நந்தினியின் உறவினர்களைச் சமாதனம் செய்தனர். த்துடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நந்தினி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே நந்தினி இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உயிரிழந்த நந்தியின் பெற்றோர் கூறுகையில், " திருமணமாகி 6 வருடத்திற்கு பிறகே நந்தினி பிறந்தார். மருத்துவர்கள் தவறான ஊசி செலுத்தியதால் தான் எங்களது ஒரே மகள் நந்தினி உயிரிழந்துள்ளார்" என்று குற்றம் சாட்டினர்.

இதேபோல் கடந்த 21-ம் தேதி காய்ச்சல் காரணமாக இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ்(24) சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார். அப்பாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மறுநாள் அப்பாஸ் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவரை மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸில் வேறொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அப்பாஸ் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அப்பாஸ்க்கு மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்காததால் அவர் உயிரிழந்து விட்டதாக அவரது பெற்றோர், மருத்துவமனை மீது புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in