உக்ரைன் போர்ச் சூழலை இந்தியா சரியாகக் கையாண்டதா?

உக்ரைன் போர்ச் சூழலை இந்தியா சரியாகக் கையாண்டதா?

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கி இன்றுடன் 42 நாட்கள் ஆகின்றன. இந்தப் போரின்போது உக்ரைனில் மருத்துவம் படித்துவந்த இந்திய மாணவர்களை மீட்டது, போரில் அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்தது என்பன உட்பட இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து நேற்று மக்களவையில் விவாதம் தொடங்கியது.

புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி எம்.பி-யான என்.கே.பிரேமசந்திரன், காங்கிரஸ் எம்.பி-யான மணீஷ் திவாரி ஆகியோர் நேற்று இது குறித்த விவாதத்தைத் தொடங்கிவைத்தனர். இந்திய மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு நடுவே இந்திய மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து இந்திய வெளியுறவுத் துறை மூலம் மீட்கப்பட்டனர்.

ஹர்தீப் சிங் புரி, கிரண் ரிஜிஜு, ஜோதிராதித்ய சிந்தியா, வி.கே.சிங் ஆகிய நான்கு அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி மீட்புப் பணிகளை மேற்பார்வையிட பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். ‘ஆபரேஷன் கங்கா’ நடவடிக்கையின் மூலம் உக்ரைனில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டனர். இது குறித்த விவாதத்தில் பதிலளித்துப் பேசிய ஹர்தீப் சிங் புரி, கிரண் ரிஜிஜு, வி.கே.சிங் ஆகியோர், உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்டதைப் போல, உலகின் எந்த நாடும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தனர். இந்தியர்களை மீட்டதில் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட பணிகளையும் அவர்கள் பாராட்டினர்.

“உக்ரைன் போர் குறித்த எச்சரிக்கையை முன்கூட்டியே வழங்கவில்லை என்று சிலர் குற்றம்சாட்டினர். முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிப்ரவரி 15, 18, 20 மற்றும் 21-ம் தேதிகளில் இந்தியா எச்சரிக்கை விடுத்தது” என்று கூறிய சிந்தியா, “பிரதான சேவகராக இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனையும் பிரதமர் மோடி காப்பாற்றினார்” என நினைவுகூர்ந்தார். பிப்ரவரி 24-ல் உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கியது ரஷ்யா.

உக்ரைன் போர் விஷயத்தில் இந்தியா நடுநிலை வகிப்பதை தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா பாராட்டினார். “இந்தியா ஒரு நடுநிலையான நாடு. எப்போதுமே சார்புநிலையை எடுத்ததில்லை. நாம் அமெரிக்கா, ரஷ்யா இரண்டு நாடுகளுக்கும் நண்பர்கள். எந்த நாட்டுக்கும் நாம் எதிரிகள் அல்ல” என்று குறிப்பிட்ட ஃபரூக் அப்துல்லா, ஹவாஹர்லால் நேருவின் வெளியுறவுக் கொள்கைதான் அதற்கு அடித்தளமிட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த விவாதங்களின் மீது இன்று பதிலளிக்கவிருக்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

Related Stories

No stories found.