திமுகவுக்கு திருகுவலியை உண்டாக்கிய திரவியம்!

ஞானதிரவியம் எம்.பி.,
ஞானதிரவியம் எம்.பி.,

எப்போதுமே தன்னைச் சுற்றி சர்ச்சைகள் சூழ வலம் வருபவர் நெல்லை திமுக எம்பி ஞானதிரவியம். நெல்லை மாவட்டத்துக்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாததால் அந்த அதிகாரத்தையும் சேர்த்து தனதாக்கிக் கொண்டவர்.

கல்குவாரி விவகாரங்களில் விதிமீறல் தொடங்கி, நில அபகரிப்புப் புகார்கள் வரை முன்னரே பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும் இந்தமுறை ஞானதிரவியத்துக்கு எதிராக பிஷப்பே களத்துக்கு வர, மெல்ல விழித்திருக்கிறது திமுக தலைமை! சிறுபான்மை வாக்குவங்கி என்னும் தேன்கூட்டில் கல் எறியப்பட்டு இருப்பதும் இதற்குக் காரணம்.

ஞான திரவியத்தை கண்டிக்கும் அமைச்சர்
ஞான திரவியத்தை கண்டிக்கும் அமைச்சர்

ஞானதிரவியம் எம்பி-யாக பதவியேற்றது முதலே சர்ச்சைகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. 2020 மார்ச் மாதத்தில் ராதாபுரம் அருகில் உள்ள சங்கனாபுரம் பகுதியைச் சேர்ந்த குமாரி பகவதி என்பவர் தனக்குச் சொந்தமான 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை எம்.பி அபகரிக்க முயல்வதாகவும், அதற்காகத் தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் கூறினார். அதன்பேரில் ஞானதிரவியம், அவரது இரு மகன்கள் உள்பட நான்குபேர் மீது நெல்லை மாவட்டம், பழவூர் காவல்நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது பாஜக நிர்வாகி பாஸ்கர் என்பவரை ஞானதிரவியம் தனது ஆதரவாளர்களுடன் தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருநெல்வேலிக்குப்போய் இரவு 10.30 மணிக்குப் போராட்டத்தில் ஈடுபட்டதும் பரபரப்பானது. இந்த விவகாரத்தில் ஞானதிரவியம் உள்பட நான்குபேர் மீது பணகுடி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.

இதையெல்லாம் மிஞ்சும்வகையில் ஞானதிரவியத்தை அடிக்கடி கனிமவளம் தொடர்பான வழக்குகளும் துரத்தின. நெல்லை மாவட்டத்தில் இருக்கும் அனேக குவாரிகள் ஞானதிரவியத்துக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் சொந்தமானவை. இங்கு விதிமீறி, அதிக கனிமங்களை எடுக்கும் குவாரிகளில் ஆய்வு செய்தால் அந்த அதிகாரிகளே அதிரடி மாற்றம் செய்யப்படுவதும் தொடர்கதையானது.

நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட குவாரிகளில் அதிக அளவு கனிமவளங்கள் எடுப்பது தொடர்பாகவும் ஞானதிரவியம் மீது சில வழக்குகள் உண்டு. நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள குவாரியில் விபத்து ஏற்பட்டு தொழிலாளிகள் உயிர் இழந்த சம்பவத்தைத் தொடர்ந்து சிலகாலம் நெல்லைமாவட்ட குவாரிகள் மூடப்பட்டன. அந்த சமயத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த அமைச்சர் சி.வி.கணேசனின் முன்னிலையிலேயே ஆட்சியருக்கு, குவாரியைத் திறக்க அழுத்தம் கொடுத்தார் ஞானதிரவியம். குறுக்கே புகுந்து அமைச்சர் சி.வி.கணேசன் தான் சூழலை மாற்றினார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஞானதிரவியத்தின் மகன் தினகரன் மீதும் கனிம வளக் கடத்தல் வழக்கு பாய்ந்தது.

இத்தனை நடந்தும் தலைமையின் கோபத்திற்கு ஞானதிரவியம் இலக்காகவில்லை. ஆனால் இம்முறை, அவருக்கு எதிராக சி.எஸ்.ஐ திருமண்டல பேராயரே களத்துக்கு வர, அதன்பின்னர் தான் எம்.பி மீது வழக்கமாகவே பாயும் வழக்குகளைத் தாண்டி, தலைமையிடம் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீசும் வந்தது. எப்போதுமே வழக்குகளை துச்சமென நினைக்கும் ஞானத்திரவியத்துக்கு கட்சி தலைமையின் நடவடிக்கை பதற்றத்தைத் தந்துள்ளது.

பிஷப் பர்னபாஸ்
பிஷப் பர்னபாஸ்

தென் மாவட்டங்களில் தென்னிந்திய திருச்சபை எனப்படும் ‘சி.எஸ்.ஐ’ அமைப்பின் கீழ் ஏராளமான கல்வி நிறுவனங்களும் உள்ளன. சி.எஸ்.ஐ சபையின் அதிகாரமிக்க பதவிகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. இதில் வென்று லே செயலாளராக நியமிக்கப்பட்டார் ஜெயசிங். இந்தப் புதிய பொறுப்பாளர்களின் ஆதரவோடு பிஷப்பாக பர்னபாஸ் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் நிர்வாகம், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் லே செயலாளர் ஜெயசிங்கிற்கும், பிஷப் பர்னபாஸுக்கும் இடையே மோதல்வெடித்தது. இதன் பின்னணியில் பிஷப் பர்னபாஸ் தலைமையில் ஒரு அணியும், லே செயலாளர் ஜெயசிங் தலைமையில் ஒரு அணியும் செயல்படத் தொடங்கினர். இதில் ஜெயசிங்கிற்கு ஆதரவாக எம்.பி ஞானதிரவியம் இருப்பதுதான் திருச்சபைக்குள் அரசியல் நுழையவும் காரணம் ஆகிவிட்டது என பகிரங்கமாகவே குற்றச்சாட்டை கிளப்பினர் பிஷப் தரப்பினர்!

இதனிடையே, திருச்சபையின் கல்வி நிலைக்குழுச் செயலாளராக இருக்கும் ஞானதிரவியம் தன்னிச்சையாக சில சொத்துகளை விற்க முடிவு செய்ததாகவும் சர்ச்சை எழுந்தது. இதற்கும் பிஷப் பர்னபாஸ் முட்டுக்கட்டை போட, ஞானதிரவியம் தரப்பு டென்ஷனானதாகச் சொல்கின்றார்கள் உள்நடப்பு அறிந்தவர்கள்.

தாக்கப்படும் போதகர்
தாக்கப்படும் போதகர்

பிஷப் பர்னபாஸ்க்கும், ஞானதிரவியத்துக்கும் இடையே கருத்து முரண் ஏற்பட்டதால், டயோசீசனில் அவர் வகித்து வந்த பொறுப்பிலும் கைவைத்தார் பிஷப். பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ சபையின் கீழ் இயங்கும் ஜான்ஸ் பள்ளியின் தாளாளர் பொறுப்பில் இருந்து ஞானதிரவியத்தை நீக்கிவிட்டு, வழக்கறிஞர் அருள் மாணிக்கம் என்பவரை தாளாளராக நியமித்தார். அருள் மாணிக்கமும் திமுக என்பதால் இதில் பெரிய சலனம் ஏற்படாது எனக் கணக்கிட்டது பிஷப் தரப்பு.

ஆனால், இதையெல்லாம் மனதில் வைத்திருந்த ஞானதிரவியம் தரப்பு, சி.எஸ்.ஐ டயோசீசன் அலுவலகத்தில் சென்று தகராறு செய்தனர். அப்போது பிஷப் பர்னபாஸ்க்கு மிகவும் நெருக்கமான போதகர் காட்புரே நோபுள் என்பவரையும் கொடூரமாகத் தாக்கினர். அந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களிலும் வைரல் ஆனது. இதனைத் தொடர்ந்து ஞானதிரவியம் உள்பட 33 பேர்மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. உடனடியாக இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் ஞானதிரவியம்.

இதனிடையே, பேராயர் பர்னபாஸ் உள்ளிட்ட சி.எஸ்.ஐ நிர்வாகிகள் சிலர் இதை முதல்வரின் தனிப்பிரிவுக்கும், திமுக தலைமைக்கும் புகாராக அனுப்பியதாகச் சொல்கிறார்கள். உளவுத்துறையும் தென்மாவட்டங்களில் இந்தப் பிரச்சினை திமுகவுக்கான சிறுபான்மை வாக்குவங்கியை பாதிக்கும் என அறிக்கை அனுப்பியதால் திமுக தலைமைக்கும் நெருக்கடி உருவானது.

அண்மையில், “தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலினை அழைக்கக்கூடாது, மீறி அவரை அழைத்தால் பாஜக மேடைகளில் பேசுவேன்” என அமலதாஸ் என்ற போதகர் பிரச்சினையைக் கிளப்பினார். இதனால் இந்த நிகழ்வுக்கு முதல்வரை அழைக்காமல் சபாநாயகர் அப்பாவுவை மட்டும் அழைத்து நிகழ்ச்சியை முடித்துக்கொண்டனர் திருச்சபையினர்.

இப்போது நெல்லை சி.எஸ்.ஐ சபைக்குள் நடந்த பிரச்சினையின் பின்னணியில் திமுக எம்பி மீதே புகார் வாசிக்கிறார்கள். இதையெல்லாம் மனதில் வைத்தே, 7 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்கும்படி ஞானதிரவியத்துக்கு சோகாஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது திமுக தலைமை.

காட்புரே நோபுள்
காட்புரே நோபுள்

இவ்விவகாரம் குறித்து விளக்கம் பெற ஞானதிரவியத்திடம் பேசினோம். “தலைமையில் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். என் தரப்பு நியாயத்தை விளக்கமாக அளிப்பேன். காட்புரே நோபுள் என்னும் போதகர் தான் அடியாள்களுடன் டயோசீசன் அலுவலகத்திற்கு வந்தார். இத்தனைக்கும் அவருக்கும் சி.எஸ்.ஐ சபைக்கும் சம்பந்தம் கிடையாது. நான் என் அலுவலகத்தில் இருக்கும் போது அதிமுகவைச் சேர்ந்த ஜெனி என்பவர் தலைமையில் திருச்சபையைச் சேர்ந்த ஜான் என்பவரிடம் தகராறு செய்ய சிலர் டயோசிசன் அலுவலகம் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவ்வளவுதான். அந்தச் சம்பவம் நடந்த இடத்தில் கூட நான் இல்லை. ஆனால், காட்புரே நோபுள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணையே செய்யாமல் என் மீது வழக்குப் போட்டுவிட்டது காவல்துறை.

இன்னும் சொல்லப்போனால், அதிமுகவினரோடு மிகவும் நெருக்கமாக இருப்பவர்தான் காட்புரே நோபுள். ஈரோடு இடைத்தேர்தலில் கூட காட்புரே நோபுள் அதிமுகவுக்காக வேலை செய்தார். கடந்த சட்டசபைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு அனுசரணையாகவே இருந்தார். அவர் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகளும் உள்ளன. அவரை பகடைக்காயாகப் பயன்படுத்தி அதிமுகவைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் கே.பி.கே செல்வராஜ், ஜெனி ஆகியோர் எனக்கு எதிராக அவரை இயக்குகின்றனர். பிஷப் இதில் கைப்பாவையாகிவிட்டார்” என்றார்.

இம்முறை நெல்லை மக்களவைத் தொகுதியை அதிமுக கூட்டணியில் தங்களுக்காக கேட்கும் திட்டத்தில் இருக்கிறது பாஜக. அதனால் பாஜக முகாமும் திருச்சபைக்குள் நடக்கும் இந்த மோதலை உன்னிப்பாகக் கவனிக்கிறது. நெல்லை தொகுதியில் கடந்தமுறை ஞானதிரவியத்தை வெற்றிபெற வைத்ததே சிறுபான்மையினரின் வாக்குகள்தான். இந்நிலையில் அந்த கூட்டிற்குள்ளேயே ஞானதிரவியம் கல் வீசி இருப்பதாச் சொல்லும் பாஜகவினர், இது தங்களுக்கே சாதகமாக அமையும் என பேச ஆரம்பித்திருப்பது தனிக்கதை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in