‘பஞ்சாப் முதல்வர் மது அருந்திவிட்டு விமானத்தில் ஏறினாரா என விசாரிக்கப்படும்!’

விமானப் போக்குவரத்துத் துறை அறிவிப்பு
‘பஞ்சாப் முதல்வர் மது அருந்திவிட்டு விமானத்தில் ஏறினாரா என விசாரிக்கப்படும்!’

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜெர்மனியிலிருந்து டெல்லி வந்த விமானத்தில், மது அருந்தியிருந்த நிலையில் ஏறியதாகவும், இதன் காரணமாக விமானம் கிளம்புவது தாமதமானதால் அவர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்திருக்கிறது. இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்திருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்.19) ஜெர்மனியின் ஃப்ராங்க்பர்ட் விமான நிலையத்திலிருந்து டெல்லி வரும் லுஃப்தான்ஸா விமானத்தில் பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் பகவந்த் மான் பயணம் செய்யவிருந்தார். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில், நடக்கவே முடியாத நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “அது சர்வதேச மண். எனவே, உண்மை நிலவரத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். லுஃப்தான்ஸா நிறுவனம்தான் அது குறித்து தகவல் அளிக்க வேண்டும். எனக்கு வரும் கோரிக்கையின் அடிப்படையில் நிச்சயம் நான் விசாரணை நடத்துவேன்” என்று கூறியிருக்கிறார்.

பகவந்த மான் மது போதையில் இருந்ததாலேயே அந்த விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக சிரோமணி அகாலி தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.

எனினும், உள்நாட்டு விமானம் வருவதற்குத் தாமதமானதாகவும், விமானத்தை மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் ஜெர்மனி நிறுவனமான லுஃப்தான்ஸா விளக்கமளித்திருக்கிறது.

இதற்கிடையே, பகவந்த் மான் மீதான இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது; போலியானது என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் மல்விந்தர் சிங் காங் கூறியிருக்கிறார். பஞ்சாப் முதல்வரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

தொடர் குற்றச்சாட்டுகள்

பகவந்த் மான் மீது இருக்கும் தனிப்பட்ட விமர்சனங்களில் ஒன்று அவர் மது அருந்தக்கூடியவர் என்பது. மது அருந்திய நிலையில் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் என்பதுதான் அவர் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. சங்க்ரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது நாடாளுமன்றத்துக்கே மதுபோதையுடன் சென்றவர் அவர். அதேசமயம், தனக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதை அவர் மறுத்ததில்லை. தான் ஒரு ‘சோஷியல் ட்ரிங்கர்’ என்றே குறிப்பிடுவார். 2019-ல், கட்சிக் கூட்டம் ஒன்றில், ‘இனி மதுவைத் தொடப்போவதில்லை’ என அறிவித்தார். எனினும், அதன் பின்னரும் அவர் மது அருந்தி பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக அவ்வப்போது விமர்சனங்கள் எழுவதுண்டு.

பைசாகி புத்தாண்டு தினத்தன்று (ஏப்ரல் 14) பதிண்டா மாவட்டத்தில் உள்ள தக்த் ஸ்ரீ தம்தமா சாஹிப் குருத்வாராவுக்குச் சென்றிருந்த அவர், மது அருந்திய நிலையில் இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மது போதையில் குருத்வாராவுக்குள் நுழைந்ததற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in