பகத் சிங் மஞ்சள் நிறத் தலைப்பாகை அணிந்திருந்தாரா?

பகத் சிங் மஞ்சள் நிறத் தலைப்பாகை அணிந்திருந்தாரா?

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் அறையில் இரண்டே படங்கள்தான் இடம்பெற்றிருக்கின்றன. ஒன்று பாபா சாகேப் அம்பேத்கரின் படம். இன்னொன்று பகத் சிங்கின் படம். அதில் பகத் சிங் மஞ்சள் தலைப்பாகையுடன் (டர்பன்) காட்சியளிக்கிறார். இரண்டுமே புகைப்படங்கள் அல்ல, ஓவியங்கள்தான். அதில் பகத் சிங்கின் ஓவியத்தில் முக்கியமான தவறு ஒன்று இருப்பதாக வரலாற்றாசிரியர்கள் சான்றுகளுடன் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதுகுறித்து பிடிஐ நிறுவனத்திடம் பேசிய சமன் லால், “பகத் சிங்கின் உண்மையான புகைப்படங்கள் நான்கே நான்குதான். ஆனால், அவற்றில் ஏதேனும் ஒரு படத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, 1975-ல் ஓவியர் அமர் சிங் வரைந்த ஓவியத்தைத்தான் பகவந்த் மான் பயன்படுத்துகிறார். அப்போது பஞ்சாப் முதல்வராக இருந்த கியானி ஜெய்ல் சிங் கேட்டுக்கொண்டதன் பேரில் வரையப்பட்ட ஓவியம் அது” என்று கூறியிருக்கிறார். பகத் சிங் குறித்து பல புத்தகங்களை எழுதியிருக்கும் சமன் லால், பகத் சிங் ஆவணக் காப்பகம் மற்றும் ஆய்வு மையத்தின் கவுரவ ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.

”ஓவியங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. அவற்றை வீட்டிலோ, பொதுக் கூட்டங்களிலோ பயன்படுத்தலாம். ஆனால், அரசு அலுவலங்களிலோ அல்லது அலுவல் நிமித்தமாகவோ ஓவியங்களைப் பயன்படுத்தக் கூடாது. மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ். வல்லபாய் படேல் போன்ற வரலாற்றுத் தலைவர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தும்போது ஏன் பகத் சிங்கின் ஓவியத்தைப் பயன்படுத்த வேண்டும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதுதொடர்பாக இன்னொரு முக்கியத் தகவலையும் அவர் குறிப்பிடுகிறார். 1970-கள் வரை பகத் சிங்கின் புகைப்படம் எனப் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஒரே படம், அவர் தொப்பியுடன் இருக்கும் படம்தான். 1929 ஏப்ரல் 3-ல் எடுக்கப்பட்ட படம் அது. அதாவது, நாடாளுமன்றக் கட்டிடத்தில் பி.கே.தத்தும் பகத் சிங்கும் வெடிகுண்டு வீசுவதற்கு 5 நாட்கள் முன்பு அப்படம் எடுக்கப்பட்டது.

1974-ல் நவான்ஷஹரில் (தற்போது ஷஹீத் பகத் சிங் நகர் என்று அழைக்கப்படுகிறது) அப்போதைய முதல்வர் ஜெய்ல் சிங் திறந்துவைத்த சிலையும் பகத் சிங் தொப்பி அணிந்திருக்கும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் சிரோமணி அகாலி தளம் அரசு அமைந்த பின்னர் தலைப்பாகை அணிந்திருப்பதுபோல அவரது சிலை அங்கு அமைக்கப்பட்டது.

அதற்கு முக்கியக் காரணம் அவரது பின்னணி சார்ந்த அடையாளப்படுத்தல்தான். சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர் பகத் சிங். ஆர்ய சமாஜுடன் தொடர்புடைய குடும்பம் அவருடையது. எனினும், மத அடையாளத்தை அவர் எப்போதோ கைவிட்டுவிட்டார். தன்னை நாத்திகவாதி என்றே குறிப்பிட்டார். ஆனால், 1975-க்குப் பிறகு அரசியல் கட்சிகள் அவரை சீக்கியராக, ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவராக அடையாளப்படுத்த முயன்றன என நினைவுகூர்கிறார் சமன் லால்.

சமன் லாலைப் போலவே, வரலாற்றாசிரியர் எஸ்.இர்ஃபான் ஹபீபும், பகத் சிங்கின் தவறான படத்தையே பஞ்சாப் அரசு பயன்படுத்துவதாகச் சுட்டிக்காட்டுகிறார்.

“பகவந்த மான் அரசியலுக்கு வந்த பின்னர்கூட தலைப்பாகை அணியவில்லை. ஆனால், தற்போது அவர் அதை அணிந்துகொள்வதை விரும்புகிறார். அது அவரது விருப்பம். அதைப் பற்றிக் கேள்வி கேட்க விரும்பவில்லை. ஆனால், உங்கள் மஞ்சள் நிறத்தை பகத் சிங்கின் தலைப்பாகையில் பூசுவதைத்தான் கேள்விக்குட்படுத்துகிறோம். பகத் சிங்குக்கும் மஞ்சள் நிறத் தலைப்பாகைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் அதுகுறித்து ஒருபோதும் எழுதியதில்லை. மஞ்சள் நிறத் தலைப்பாகையை அவர் அணிந்திருப்பதாக ஒரு புகைப்படம் கூட இல்லை” என்று ஹபீப் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கதர் இயக்கத்தை (Ghadar movement) சேர்ந்த கர்தார் சிங் சராபா, பகத் சிங்கின் ஆதர்சங்களில் ஒருவர். 19 வயதில் அவர் தூக்கிலிடப்பட்டார். அவரும் தலைப்பாகை அணிந்திருப்பதாக ஓவியங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாக சமன் லால் விமர்சிக்கிறார். சராபா கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்தபோது எடுக்கப்பட்ட ஒரே ஒரு படம்தான் உண்மையானது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதேபோல், ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்துக்குக் காரணமான மைக்கேல் ஓ'ட்வையரை லண்டனில் சுட்டுக்கொன்ற சர்தார் உதம் சிங்கின் புகைப்படமும் தவறானது என்று சொல்கிறார் சமன் லால்.

“உதம் சிங்கின் உண்மையான புகைப்படம் பயன்படுத்தப்படவே இல்லை. அவர் அரிதாகத் தலைப்பாகை அணிவதுண்டு என்றாலும், அவர் தாடி வைத்துக்கொள்ளவில்லை. அமிர்தரசஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் அரசு வைத்திருக்கும் உதம் சிங்கின் சிலை தவறானது. அவரது சொந்த ஊரில் அரசு வைத்திருக்கும் சிலைகள் தவறானவை. சொல்லப்போனால் அசிங்கமானவை” என்று குறிப்பிட்டிருக்கிறார் சமன் லால்.

இதையும் வாசியுங்கள்:

பகத் சிங் மஞ்சள் நிறத் தலைப்பாகை அணிந்திருந்தாரா?
சர்தார் உதம்: உலராத உதிரத்தின் துளி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in