குடிசையிலிருந்து கோபுரத்துக்கு; கொரோனா நெருக்கடியில் நிகழ்ந்த அதிசயம்!

மலீஷா கார்வா
மலீஷா கார்வா

கொரோனா காலம் பலரது வாழ்க்கையை தலைகீழாக கவிழ்த்தது மட்டுமன்றி, வேறுபலரை தலைநிமிர்த்தவும் செய்திருக்கிறது. ‘குடிசை இளவரசி’ என்ற அடைமொழியோடு தற்போது கொண்டாடப்படும் மலீஷா கார்வா அவர்களில் ஒருவர்.

கொரோனா இந்தியாவில் தலைகாட்டியபோது மலீஷாவுக்கு 11 வயது. மும்பை குடிசைவாழ் பகுதியான தாராவியில் அவரது குடும்பம் அமைந்திருந்தது. சூட்டிகையான மலீஷா படிப்பில் கெட்டி. அக்கம்பக்கத்தினர் வாய்பிளக்கும் அளவுக்கு ஆங்கிலத்தில் அசத்துவார். ஹாலிவுட் பிரபலமான ராபர்ட் ஹாப்மேன் தனது இசை ஆல்பத்துக்காக மும்பை புறநகர்களில் சுற்றி அலைந்தபோது மலீஷாவை கண்டுகொண்டார்.

மலீஷாவின் ஆங்கிலம் இருவர் இடையிலான சுவர்களை உடைத்தது. குடிசைவாழ் பகுதியில் பெயரளவிலான ஒரு வீட்டில் இருந்தபடி, மலீஷா கார்வா ஒரு பறவை போல சிறகடித்தது ராபர்டை ஈர்த்தது. மலீஷாவின் பேச்சு, நடனம் மற்றும் அன்றாடங்களை பதிவு செய்து யூடியூப் மற்றும் இன்ஸ்டாவில் வலையேற்றினார். கொரோனா காரணமாக சர்வதேச விமான சேவை துண்டிக்கப்பட்டதும், மலீஷாவை மேலும் அறிந்துகொள்ள ராபர்ட்டுக்கு உதவியானது.

சிறுமியின் படிப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்காக இணையவெளியில் நிதி சேகரிப்பையும் ராபர்ட் தொடங்கினார். ரூ15 லட்சத்தை இலக்காகக் கொண்ட அந்த சேகரிப்பு, முக்கால் கிணறு தாண்டியிருக்கிறது. அதற்குள் ராபர்ட் உருவாக்கிய மலீஷாவின் இன்ஸ்டா வீடியோக்கள் வாயிலாக விளம்பர மாடல் உலகம் அவருக்கு அகலக் கதவு திறந்தது.

ஆயுர்வேத அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கும் பெரும் நிறுவனம் ஒன்று, மலீஷாவை வளைத்துப்போட்டது. தனது யுவதி செலக்‌ஷன்ஸ் பிரிவிலான தயாரிப்புகளை, மலீஷாவை வைத்து விளம்பரம் செய்தது. சர்வதேச அளவில் அழகின் இலக்கணங்களும், அடையாளங்களும் மாறி வருவதன் மத்தியில், இந்தியர்களின் ’டஸ்கி ஸ்கின்’ புகழ் பெற்று வருகிறது. அந்த வகையில், மலீஷா அழகு சாதன பொருட்களின் தூதுவரானார்.

மலீஷா ஒரு குறும்படத்தில் நடித்தார். 2 ஹாலிவுட் படங்களிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இடையே படிப்படையும் விடாது தொடர்ந்து வருகிறார். மலீஷாவுக்கு இப்போது வயது 14. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் தலைசிறந்த மாடல்களில் ஒருவராக வளர்ந்திருப்பார். குடிசையிலிருந்து மாடல் உலகின் கோபுரத்துக்கு வளர்ந்த போதிலும், தாராவி குடிசை வீட்டிலிருந்து வெளியேற தயங்குகிறார். மலீஷாவை உருவாக்கிய, அடிப்படை வசதிகளற்ற குடிசைகள் மலீஷா வாயிலாக பலரது கவனத்தை கவர்ந்து வருகின்றன.

மலீஷாவுக்கு நிதியளிக்க முன்வந்த பலரும், அங்கு கவனிப்பாரற்ற இதர மலீஷாக்களை அரவணைக்கக்கூடும். குடிசைப் பகுதிக்கு அடைப்படை வசதிகள் கிடைக்க வாய்ப்பாகும். இந்த வகையில் அழகு என்பது புறத்தோற்றத்தில் மட்டும் அல்ல என்பதற்கு மாடலாகி இருக்கிறார் மலீஷா.

அண்மையில், மலீஷாவை விளம்பர தூதுவராகக் கொண்ட அழகுசாதனப் பொருட்களின் கிளை ஒன்றுக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கே, மாடல் உருவிலான தனது புகைப்படங்களை தரிசித்து, அதிசயித்த மலீஷாவின் வீடியோ இணையவெளியில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in