பாதயாத்திரை சென்ற மடாதிபதிக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு

பாதயாத்திரை சென்ற மடாதிபதிக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு

தருமபுரம் ஆதீன மடாதிபதிக்கு இஸ்லாமியர்கள் சால்வை அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்ற சம்பவம் மதநல்லிணக்கத்திற்கு உதாரணமாக அமைந்திருந்தது.

மயிலாடுதுறையில் உள்ள பழமைவாய்ந்த சைவ ஆதீன திருமடமான தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமாக மயிலாடுதுறையைச் சுற்றிலும் திருக்கடையூர், வைத்தீஸ்வரன்கோயில், பேரளம், திருக்குவளை உள்ளிட்ட 27 இடங்களில் கோயில்கள் உள்ளன. 

இவற்றில் ஜன. 27-ம் தேதியன்று  பேரளம் ஸ்ரீ பவானி அம்மை உடனாகிய சுயம்புநாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்.1- ம் தேதியன்று ஸ்ரீ ஞானபிரக தேசிக சுவாமிகள் குருமூர்த்த நூதன ஆலய மகா கும்பாபிஷேகம், 3-ம் தேதி கிடாரம் கொண்டான் ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம், 12 -ம் தேதி திருக்குவளை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இவற்றில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீன 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இன்று ஆதீன மடத்திலிருந்து ஆதீன பூஜா மூர்த்தி செந்தமிழ் சொக்கநாதருடன் பாதயாத்திரையை துவங்கினார். ஒட்டகம், குதிரை ஆகியவை முன்னே செல்ல பரிவாரங்களுடன் மேளதாளங்கள் முழங்க அவர் பாதயாத்திரையாகச் சென்றார்.

அவருக்கு  வீடுகள் தோறும் பூர்ண கும்பம் வைத்து, பாதபூஜை செலுத்தி பொதுமக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். 

இந்த வகையில் மயிலாடுதுறை தைக்கால் தெரு பள்ளிவாசல் சார்பாக ஜமாத்தார்கள் பள்ளிவாசல் முத்தவல்லி அப்துல் அஜீஸ் தலைமையில் இஸ்லாமியர்கள் பெருந்திரளாக திரண்டு மடாதிபதியை இன்று வரவேற்றனர். அவருக்கு பேரன்புடன்  சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்களின் அன்பை ஏற்றுக்கொண்ட மடாதிபதி பதிலுக்கு அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பதில் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வு தமிழகத்தில் நிலவும் மத நல்லிணக்கத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in