கோரப்புயலில் சிதிலமான தனுஷ்கோடி: 58 ஆண்டுகளுக்கு பின்னர் எப்படியிருக்கிறது?

கோரப்புயலில் சிதிலமான தனுஷ்கோடி: 58 ஆண்டுகளுக்கு பின்னர் எப்படியிருக்கிறது?

2004 வருடத்தின் சுனாமி புயலை மறக்கத்தான் முடியுமா? அந்த வருடத்தின் டிச.26 அன்று நிகழ்ந்த சுனாமி பேரிடரும், அதற்கு ஏராளமான உயிர்களை பலியானதுமான நினைவுகள் இன்றைக்கும் உலுக்கி எடுப்பவை. 18 ஆண்டுகள் உருண்டோடிய பின்னரும் அதன் தாக்கம் தீர்ந்தபாடில்லை.

அதிலும் சுனாமியின் நேரடி சாட்சிகளான மக்கள் மத்தியில், ஆண்டுதோறும் டிசம்பரின் கடைசி 10 நாட்களை கடப்பதில் எங்கிருந்தோ ஒரு கிலி தொற்றிக் கொள்ளும். இதுதவிர அவ்வப்போது எட்டிப்பார்க்கும் புயல்களும் இந்த மக்களை அலைகழித்து வருகின்றன. 2008-ல் ’நிஷா’, 2010-ல் ’ஜல்’, 2011-ல் ’தானே’, 2012-ல் ’நீலம்’, 2013-ல் ’மடி’, 2016-ல் ’வர்தா’, 2017-ல் ’ஒக்கி’, 2018-ல் ’கஜா’ என்ற வரிசையில் சமீபத்திய ’மாண்டஸ்’ என புயல்களின் பட்டியல் நீள்கிறது. இவற்றில் நிஷா, தானே, வர்தா, ஒக்கி, கஜா போன்ற புயல்களின் பாதிப்பு அதிகம் எனலாம்.

இந்த புயல்களை எல்லாம் விஞ்சும் வகையில் 1964ம் ஆண்டு டிசம்பரில் தாண்டவமாடிய புயலில் தனுஷ்கோடி என்ற நகரமே தரைமட்டமானது. புயல் என்பதற்கும் அப்பால் கிட்டத்தட்ட சுனாமியின் தாக்குதலுக்கு நிகரான அழிவுகளுக்கு தனுஷ்கோடி ஆளானது. 1964, டிசம்பர் இறுதி வாரம் ஊழியாய் வந்து தனுஷ்கோடியை சிதிலமாக்கிய புயல் குறித்து, தற்போது 70 வயதை கடந்தவர்கள் மத்தியில் சொல்வதற்கு பீதியூட்டும் நிஜக் கதைகள் இருக்கின்றன.

இலங்கையில்  ராவணனை சாய்த்து, சீதையை மீட்டு வந்தபோது ராமர் எய்த அம்பு விழுந்த இடம் தான் தனுஷ்- கோடி (வில் - அம்பு). இந்தியாவின் தென் எல்லையான தனுஷ்கோடி, அக்காலத்து இலங்கை - இந்தியா இடையிலான வணிக தொடர்புக்கு முக்கிய துறைமுகமாகவும் திகழ்ந்திருக்கிறது. தமிழகம் உட்பட பல்வேறு பிராந்தியங்களில் இருந்தெல்லாம் ஏராளமானோர் தொழில் ரீதியாக இங்கு வந்து செல்வார்கள். 

இது தவிர இந்தியாவை இலங்கையுடன் இணைத்த ரயில் நிலையமும் தனுஷ்கோடியின் சிறப்புகளில் ஒன்றாக விளங்கியது. ராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் வணிக ரீதியிலும் தனுஷ்கோடி முக்கியத்துவம் பெற்றிருந்தது. இவ்வாறு 100 ஆண்டுகளுக்கு முன்னர் ராமேஸ்வரத்தை விட தனுஷ்கோடியே பிரசித்தி பெற்று இருந்தது.

1914-ல் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து, சென்னை முதல் தனுஷ்கோடிக்கு போட் மெயில்  எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து ஆகியவை இருந்தன. சென்னையில் இருந்து புறப்படும் போட் (போர்ட்) மெயில் ரயிலில் இலங்கைக்கு டிக்கெட் வாங்குவோர், தனுஷ்கோடி வரை ரயிலில் பயணிப்பார்கள்; பின்னர் அங்கிருந்து படகில் தலைமன்னார் செல்வார்கள். 

வரலாற்றில் பிரதான இடம் பிடித்த  தனுஷ்கோடி, 1964 புயலுக்கு பின்னர் மனிதர்கள் வசிக்க தகுதியற்ற இடமாக மாறிப்போனது. அந்த நிலை இன்று வரை நீடிக்கிறது.

1964, டிச.17-ல் தெற்கு அந்தமானில்  உருவான புயல் மெல்ல வலுவிழந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அங்கிருந்து பலத்த புயலாக மாறி, டிச.22 -ல் இலங்கையின் வவுனியாவை தாக்கியது. இதை தொடர்ந்து பாக் ஜலசந்தியில் மையம் கொண்ட இப்புயல் டிச.23 அதிகாலை தனுஷ்கோடியை நோக்கி திரும்பியது. மணிக்கு 250 கிமீ வேகத்தில் புயல் காற்றுடன், மிக பலத்த மழை பெய்தது. 

டிச.22 அதிகாலை கடலில் ஏற்பட்ட புயலால் ஆளுயரத்துக்கு எழும்பிய ராட்சத அலைகள் தனுஷ்கோடியை தாக்கத் தொடங்கின. உறக்கத்தில் ஆழ்ந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், புயலின் கோரத்தாண்டவத்துக்கு பலியானார்கள். இதில் தனுஷ்கோடி ரயில் நிலையம், தேவாலயம், பள்ளி, மருத்துவமனை, தபால் நிலையம், பயணியர் தங்கும் விடுதி, கோயில் உள்பட பல  கட்டடங்கள் சிதைந்தன.

தனுஷ்கோடி ரயில்வே ஸ்டேஷனை நெருங்கிய பாம்பன் - தனுஷ்கோடி பாசஞ்சர் ரயில், கடலில் விழுந்ததில், அதில் பயணித்த 100-க்கும் மேற்பட்டோர் மூழ்கி உயிரிழந்தனர். அழிந்து போன வணிக நகரான தனுஷ்கோடி, தற்போது புயலின் எச்சங்களாக காட்சியளிக்கிறது. இச்சம்பவத்தை ’தேசிய பேரிழப்பா’க அறிவித்த மத்திய அரசு, தனுஷ்கோடியை ’மனிதர்கள் வாழ முடியாத பகுதி’ எனவும் அறிவித்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in