சதுரகிரி மலை ஏற குவிந்த பக்தர்கள்: கடைசிநேர அனுமதி மறுப்பால் தவிப்பு

சதுரகிரி மலை ஏற குவிந்த பக்தர்கள்: கடைசிநேர அனுமதி மறுப்பால் தவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரி மலை உள்ளது. இங்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நேரங்களில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும். நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலை ஏறக் குவிந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் செக்போஸ்ட் பகுதியிலேயே நீண்டநேரம் காத்திருந்து விட்டு இன்று தங்கள் ஊர்களுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். நாளை பவுர்ணமி தரிசனத்திற்கு அனுமதி உண்டா என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. மாதத்தில் அமாவாசை மற்றும் பவுர்ணமி காலங்களில் 5 நாள்கள் மட்டுமே பக்தர்களுக்கு இங்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதேபோல் நவராத்திரி விழாவின் போது கொலு வைத்திருப்பதால் 9 நாள்களும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அண்மையில் முடிந்த நவராத்திரி விழாவின்போது பக்தர்கள் வனப்பகுதியில் பெய்த கனமழையால் அனுமதிக்கப்படவில்லை. தீபாவளியையொட்டிய அமாவாசை காலத்திலும் வனத்திற்குள் நெருப்பு பற்றியதால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் சுந்தர மகாலிங்க சுவாமி கோயில் தரிசனத்திற்கு சிலமாதங்களாகவே காத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பிரதோஷம் வந்தது. இதற்காக வழக்கமாகவே சதுரகிரிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதனோடே நாளை பவுர்ணமியும் வந்ததால் கோயில் பிரதோஷத்திற்குத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சதுரகிரி யாத்திரை செல்ல முகாமிட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று கோயில் அமைந்துள்ள பகுதியில் திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக பக்தர்கள் தரிசனம் செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களும் தாணிப்பாறை வனத்துறை கேட்டின்முன்பு திருப்பி அனுப்பப்பட்டனர். கோயில் நடை திறக்கப்பட்டு பூசாரிகள் மட்டும் 18 வகையான பொருள்களால் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

இந்நிலையில் நாளை பவுர்ணமி வருகிறது. நாளை சதுரகிரி யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் தாணிப்பாறை கேட்டின் முன்பு பக்தர்கள் பலரும் காத்துள்ளனர். ஆனால் மழைவிட்ட பின்பே அனுமதி உண்டா என்ற விவரம் தெரியவரும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in