
இந்து அறநிலையத்துறையை கண்டித்து கோயில் வளாகத்திற்குள் பால்குடத்துடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் பக்தர்களால் பரபரப்பு நிலவுகிறது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் உள்ள பிரபலமான முருகன் திருத்தலங்கள் ஒன்றான பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசாமி திருக்கோயிலானது தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து திருமலைக்குமாரசாமி திருக்கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், பால்குடம் உள்ளே செல்ல அனுமதி பெறவில்லை எனவும், உரிய அனுமதி பெற்றால் தான் உள்ளே அனுமதிப்போம் எனவும் கூறி தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பக்தர்கள் ஆண்டாண்டு காலம் நடைபெற்று வரும் இந்த பாரம்பரிய பால்குடத்தை மறித்து உள்ளே செல்ல அனுமதிக்காத, இந்து அறநிலையத்துறையையும், ஊழியர்களையும் கண்டித்தும் கோயில் உள்ளேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அங்கு வந்த இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சூழலில், பக்தர்கள் பக்தியுடன் எடுத்து வந்த பால்குடத்தை அதிகாரிகள் எப்படி தடுத்து நிறுத்த முடியும் எனவும் இது இந்து அறநிலைத்துறை அதிகாரிகளின் அராஜகசெயல் எனக்கூறி இந்து அறநிலையத்துறைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு நிலை வருகிறது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.