‘அவர்களை மன்னித்துவிட்டேன்’ - மீண்டும் முதல்வராவதாகச் சொல்லி கிண்டலுக்குள்ளான தேவேந்திர ஃபட்னவீஸ் பதிலடி

‘அவர்களை மன்னித்துவிட்டேன்’ - மீண்டும் முதல்வராவதாகச் சொல்லி கிண்டலுக்குள்ளான தேவேந்திர ஃபட்னவீஸ் பதிலடி

2019 மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், பாஜக - சிவசேனா கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. முடிவுகள் வெளியானதும் செய்தியாளர்களைச் சந்தித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ‘கூட்டணி ஃபார்முலா’ எனும் பதத்தை முன்வைத்து அதிர்வுகளைக் கிளப்பினார். பாஜகவும் சிவசேனாவும் சுழற்சி முறையில் முதல்வர் பதவியைப் பகிர்ந்துகொள்வது என்று மக்களவைத் தேர்தலின்போதே முடிவுசெய்யப்பட்டுவிட்டது; பேச்சுவார்த்தையில் அமித் ஷாவும், பட்னவீஸும் உடன் இருந்தார்கள் என்று அடுத்தடுத்த நாட்களில் பல குண்டுகளைப் போட்டார். ஆனால், பாஜக அதைக் கடுமையாக மறுத்ததைத் தொடர்ந்து கூட்டணி உடைந்தது. பின்னர் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியமைத்தது.

முன்னதாக, இந்தப் பிரச்சினை நடந்துகொண்டிருந்தபோதே அஜித் பவாரின் துணையுடன் அவசர அவசரமாக 2019 நவம்பர் 23-ல் இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார் ஃபட்னவீஸ். அஜித் பவார் துணை முதல்வரானார். எனினும் 80 மணி நேரம்தான் அந்த ஆட்சி நீடித்தது. முன்னதாக 2019 தேர்தலுக்கு முன்பே ‘நான் மீண்டும் ஆட்சிக்கு வருவேன்’ எனச் சூளுரைத்தார் ஃபட்னவீஸ்.

ஆனால், மகாராஷ்டிரத்தில் சமீபத்தில் சிவசேனா கட்சியின் அதிருப்தி எல்எல்ஏ-க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கி நடத்திய அரசியல் கலகத்தின் விளைவாக முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.

முன்னதாக ஏக்நாத் ஷிண்டேயின் கிளர்ச்சிக்குப் பின்னே பாஜக இருப்பது ஊருக்கே தெரிந்த ரகசியமாக இருந்த நிலையில், மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியைச் சந்தித்து உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கோரினார் ஃபட்னவீஸ். இதையடுத்து ஃபட்னவீஸ் மீண்டும் முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அமித் ஷா எடுத்த முடிவின்படி ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். ஃபட்னவீஸ் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். இருவரும் ஜூன் 30-ல் பதவியேற்றுக்கொண்டனர். இந்த முடிவு ஃபட்னவீஸுக்கே கடைசிவரை தெரியாது என்றும் கட்சித் தலைமை சொன்னதால் வேறு வழியின்றி அதை அவர் ஏறுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து அவரது பழைய சபதம் என்னவாயிற்று என்று சமூகவலைதளங்களில் பலரும் கிண்டல் செய்யத் தொடங்கினர்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இன்று இதுகுறித்து மெளனம் கலைத்திருக்கிறார் ஃபட்னவீஸ். இன்று மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், “மீண்டும் வருவதாக நான் சொன்னதை வைத்து நான் கடுமையாகக் கிண்டல் செய்யப்படுகிறேன். என்னைக் கிண்டல் செய்தவர்களை நான் பழிவாங்கப்போகிறேன் - அவர்களை மன்னிப்பதன் மூலம்” என நகைச்சுவையுடன் கூறினார்.

அதேபோல், அமலாக்கத் துறை மூலம் சிவசேனா கட்சி எம் எஎல்ஏ-க்களுக்கு அழுத்தம் தந்து ஆட்சியைப் பிடித்திருப்பதாக பாஜகவை எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது 'ஈடி’, 'ஈடி’ (ED- Enforcement Directorate) என எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டதாகவும் குறிப்பிட்ட ஃபட்னவீஸ், “ஈடி-யால் புதிய அரசு அமைக்கப்பட்டிருப்பது என்பது உண்மைதான். E என்றால் ஏக்நாத், D என்றால் தேவேந்திர என்று அர்த்தம்” என்றும் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in