
பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய திருச்சி வட்டாட்சியர் அலுவலக துணை வருவாய் ஆய்வாளருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி, கொட்டப்பட்டு, இந்திராநகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவலர் திருச்சக்கரவர்த்தி, குண்டூரில் தான் வாங்கியிருந்த வீட்டு மனைக்கு தனிப்பட்டா கேட்டு திருச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக கடந்த 16.10.2007 தேதியன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் துணை வருவாய் ஆய்வாளர் கணேசமூர்த்தி என்பவரை சந்தித்து பட்டா தொடர்பாக கேட்டிருக்கிறார்.
பட்டா கிடைக்க வேண்டுமென்றால் ரூ.1000 லஞ்சமாக தர வேண்டும் என்று கணேசமூர்த்தி கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத திருச்சக்கரவர்த்தி கொடுத்த புகாரின் பேரில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸார் லஞ்சம் வாங்கும்போது கணேசமூர்த்தியை கையும் களவுமாக பிடித்தனர். கணேசமூர்தியின் மீது திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கணேசமூர்த்திக்கு ஊழல் தடுப்பு சட்டம் 1988 பிரிவு 7ன் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.30,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட தவறினால் 6 மாத சிறைத் தண்டனையை கூடுதலாக அனுபவிக்க வேண்டும். அடுத்து ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 13(2) உடன் இணைந்த 15(7)(d)ன் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதம் ரூ.10,000 அபராதம் கட்ட தவறினால் 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பில் கூறியுள்ளார்.