
கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் மாநகர போலீஸ் துணை கமிஷ்னர் சந்தீஷ் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சஞ்சய் ராஜாவை இன்று காலை கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸார் இந்த பகுதிக்கு அழைத்து வந்தனர். சஞ்சய் ராஜா சரவணம்பட்டி பகுதியில் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்ததாக சொன்னதால் பறிமுதல் செய்ய அவரை அழைத்து வந்தனர்.
மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தவுடன் அவர் போலீஸாரை நோக்கி சுடத் தொடங்கிவிட்டார். தற்காப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர் திருப்பி சுட்டதில் சஞ்சய்ராஜா காலில் குண்டு பாய்ந்தது. அவர் 10 நிமிடத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது நல்ல நிலையில் உள்ளார். அவர் போலீஸாரை குறிவைத்து சுட்டார். ஆனாலும் அதிர்ஷ்டவசமாக போலீஸார் தப்பிவிட்டனர்.
சஞ்சய்ராஜா மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் இருக்கிறது. துப்பாக்கி எங்கு வாங்கினார் என்பது குறித்து விசாரித்தபோது பீகார், ஒடிசா என சொல்லியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கோவையில் துப்பாக்கி கலாச்சாரம் கிடையாது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த துப்பாக்கி நாட்டு துப்பாக்கியை போலவே உள்ளது. மற்றொரு துப்பாக்கி சற்று மாறுதலாக இருக்கிறது. அதை ஆய்வுக்கு அனுப்பினால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். துப்பாக்கியில் எவ்வளவு குண்டுகள் இருக்கிறது என்பது ஆய்வுக்கு பின்னரே தெரியவரும்" என்று கூறினார்.