வங்கக்கடலில் உருவாகிறது புயல்: 26 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்பாேகிறது கனமழை!

வங்கக்கடலில் உருவாகிறது புயல்: 26 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்பாேகிறது கனமழை!

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகவுள்ளதை அடுத்து இன்று 26 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் கூறியதாவது: அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது.  இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, 22-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

இதற்கடுத்த 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும். அதன்படி 24 அல்லது 25-ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், பெரம்பலூர், கடலூர், அரியலூர், கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 26 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 20-ம் தேதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடியுடன் மிதமான மழை பெய்யக் கூடும்" என்று  கூறினார்.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு அடையாளமாக வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. பொதுவாகவே அப்படி உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் தான் வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை  கொடுக்கும்.  இதனால் இந்த ஆண்டு எதிர்பார்த்தபடி அக்டோபர் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும், அது நல்ல மழையை கொடுக்கும்  என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in