செல்போன் சுவிட்ச்ஆப்; கொடூரமாக கொல்லப்பட்ட தந்தை: வீட்டிற்கு வந்த மகன் அதிர்ச்சி

செல்போன் சுவிட்ச்ஆப்; கொடூரமாக கொல்லப்பட்ட தந்தை: வீட்டிற்கு வந்த மகன் அதிர்ச்சி

சென்னையில் பல் மருத்துவமனை உரிமையாளரை கொலை செய்துவிட்டு செல்போன், பணத்துடன் தப்பி ஓடிய கொலையாளிகளை போலீஸார் தேடிவருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி மெகசின்புரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (73). இவர் அதே பகுதியில் வியாசை என்ற பெயரில் பல் மருத்துவமனை நடத்தி வந்தார். இவரது மகன் ராஜா எம்கேபி நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 26-ம் தேதி ராஜா காரைக்குடியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்ற நிலையில் அவரது தந்தை பன்னீர்செல்வம் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மேலும் பன்னீர் செல்வத்திற்கு கொடுங்கையூர், வியாசர்பாடி, வள்ளலார் நகர் ஆகிய இடங்களில் சொந்தமாக வீடு உள்ளது.

பிராட்வே பகுதியை சேர்ந்த கலா(45) என்பவர் பன்னீர்செல்வத்திற்கு வாடகை வசூல் செய்து கொடுப்பதுடன் அவரது வீட்டு பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பன்னீர்செல்வத்திற்கு அவரது மகன் ராஜா போன் செய்த போது அவரது போன் சுவிட்ஆப் ஆகியிருந்தது. இதையடுத்து, நேற்று இரவு காரைக்குடியிலிருந்து சென்னை திரும்பிய ராஜா உடனே தந்தையை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றார். வீட்டில் சென்று பார்த்தபோது பன்னீர்செல்வம் கழுத்து, விலா எலும்பு, பின்பக்க தலையில் காயங்களுடன் இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே ராஜா இது குறித்து வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் அங்கு வந்த போலீஸார், பன்னீர்செல்வம் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த 27-ம் தேதி பன்னீர்செல்வம் தனது மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் பல் மருத்துவர் யுவராணிக்கு சம்பளம் வழங்கவேண்டும் என கூறி கலாவிடம் 70 ஆயிரம் பணத்தை பன்னீர்செல்வம் வாங்கியுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட யாரோ சிலர் வீடு புகுந்து பன்னீர்செல்வத்தை கொலை செய்து விட்டு செல்போன், 70 ஆயிரம் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் பன்னீர்செல்வம் வீட்டருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in