கைலி கட்டி மனு கொடுக்க வந்த குறவர் இனத்தைச் சேர்ந்தவருக்கு அனுமதி மறுப்பு: காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு

கைலி கட்டி மனு கொடுக்க வந்த குறவர் இனத்தைச் சேர்ந்தவருக்கு அனுமதி மறுப்பு:  காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு

‘ஜெய்பீம்’ திரைப்படம் தொடர்பாக புகார் மனு கொடுக்க கைலி கட்டி வந்த குறவர் இனத்தைச் சேர்ந்தவரை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்திய காவலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது. அதன் தொடர்ச்சியாக இக்கதையில் குளஞ்சியப்பன் கதாபாத்திரத்தில் தொடர்புடைய தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த குறவர் இனத்தைச் சேர்ந்த குளஞ்சியப்பன் 'ஜெய்பீம்' படம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க இன்று வந்தார்.

அப்போது அவர் கைலி, சட்டையுடன் இருந்ததால் போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர். கைலி கட்டிக்கொண்டு வரும் நபர்கள் யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை என போலீஸார் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குளஞ்சியப்பன் செய்வதறியாமல் திகைத்து நின்றார்.
அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அவரிடம் சென்று என்ன நடந்தது என கேட்டனர். அப்போது அவர் நடந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உடனே செய்தியாளர்கள் அருகிலிருந்த கடைக்குச் சென்று வேஷ்டி ஒன்றை வாங்கி வந்து குளஞ்சியப்பனிடம் கொடுத்தனர்.
அந்த வேட்டியைக் கட்டிச் சென்ற குளஞ்சியப்பனை போலீஸார் உள்ளே செல்ல அனுமதி அளித்தனர். அதையடுத்து அவர் ஆணையர் அலுவலகத்தில் ‘ஜெய்பீம்’ தொடர்பான புகாரை அளித்து சென்றார்.

இது குறித்து அவரது வழக்கறிஞர் கூறுகையில்,” காவல் ஆணையர் அலுவலகத்தின் விதிமுறையில் பல்வேறு சிக்கல்கள் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக சாமானிய மக்கள் தாங்கள் உடுத்தும் உடையை தவிர வேறு வழியின்றி இருக்கும் பட்சத்தில் புகார் அளிக்க வரும் புகார்தாரர்கள் இவ்வாறு உடை அணிந்திருக்க வேண்டும் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே. இந்த நடைமுறையை ஆணையர் எளிமையாக்கி சாமானிய மக்களும் அவரவர் உடைகளில் வந்து செல்ல அனுமதி வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in