தமிழகத்தை மிரட்டும் டெங்கு: மதுரை நகரில் 81 பேர் பாதிப்பு

தமிழகத்தை மிரட்டும் டெங்கு: மதுரை நகரில்  81 பேர் பாதிப்பு

மழைக்காலம் தொடங்கி விட்டதால் தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. மதுரை மாநகரில் இதுவரை 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டாக கரோனா தொற்று மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு தொற்று நோயாக இல்லாததால் தொற்று நோயாக பரவிய கரோனாவை ஒழிக்க சுகாதாரத்துறை முக்கியத்துவம் கொடுத்தது. அதனால், கடந்த 2 ஆண்டாக டெங்கு பரவியபோதும் அதன் பாதிப்பு வெளியே தெரியாமல் இருந்தது.

மழையால் தீவிரமாகிறது
தற்போது கரோனா அடங்கியதால் டெங்கு பாதிப்பு தமிழகத்தில் தற்போது மெல்ல மெல்ல தெரிய ஆரம்பித்துள்ளது. டெங்கு காய்ச்சல், வழக்கமாக தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் தான் பரவி வருகிறது.

தற்போது தென் மேற்கு பருவமழை பெய்துவரும் சூழலில் தமிழகத்தில் கோவை, மதுரை மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் டெங்கு வேகமெடுக்க தொடங்கியதால் சென்னையில் கடந்த வாரம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சுகாதாரத்துறை அதிகாரிகளையும் அழைத்து டெங்கு கொசு ஒழிப்பு கூட்டம் நடத்தப்பட்டது.
அதில், டெங்கு பாதிப்புள்ள வார்டுகளைக் கண்டறிந்து அந்த வார்டுகளில் அதற்கு முந்தைய காலக்கட்டங்களுடன் ஒப்பிடும்படியும், அதிகமான பாதிப்புள்ள வார்டுகளை ‘ஹாட் ஸ்பாட்’ வார்டுகளாக பட்டியலிட்டு கொசு ஒழிப்பு பணியாளர்களை நியமித்து இந்த காய்ச்சலை தடுக்க அறிவுரை வழங்கப்பட்டது.

81 பேர் பாதிப்பு

மதுரையில் தற்போது வரை இந்த மழைக்கால சீசனில் 81 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை.

மதுரை மாவட்டத்தில் கடந்த 2012-13-ம் ஆண்டு காலக்கட்டத்தில் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி, நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 2017-2018-ம் ஆண்டில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 20 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தனர். இந்த காலக்கட்டத்தில் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகினர். அதன்பிறகு அதுபோன்ற பாதிப்பு தற்போது வரை ஏற்படாமல் கட்டுப்படுத்தப்பட்டாலும் டெங்கு காய்ச்சலையும், அதன் உயிரிழப்புகளையும் நிரந்தரமாக தடுக்க முடியவில்லை.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ டெங்கு காய்ச்சலை பொறுத்தவரையில் ஏடிஎஸ் ஏஜிப்தி (Adees ageypti) என்ற வகை கொசு பரப்புகிறது. இந்த கொசுக்கள் டெங்கு நல்ல தண்ணீரில் வளரக்கூடியவை. அதனால், மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டு மாடி, சுற்றியிருகள்ள காலி இடங்களில் தூக்கியெறியப்படும் தெர்மாகோல், பிளாஸ்டிக் டயர், தேங்காய் மட்டையில் செயற்கையாக தேங்கும் நல்ல தண்ணீரில் இந்த கொசுப்புழு அதிகளவு வளர்கிறது. அதுபோல், வீட்டு உபயோகத்திற்கு ட்ரம், பாத்திரங்களில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரிலும் இந்த கொசுக்கள் வளர்கிறது.
அதனால், பாத்திரங்களை மூடி வைத்தால் கொசு முட்டையிடாமல் இருக்கும். பாத்திரங்களை 4 நாட்களுக்கு ஒரு முறை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். வீடுகளுக்கு வரும் மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துஐழப்பு கொடுக்க வேண்டும் ’’ என்றார்.

எந்தெந்த இடங்களில் பாதிப்பு?

மதுரை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க 530 டெங்கு ஒழிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு, வீடாகச் சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், ஆனையூர், அனுப்பானடி, ஆலங்குளம் உள்ளிட்ட இடங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இந்த இடங்களில் மக்களை ஜாக்கிரதையாக இருக்க மாநகராட்சி எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in