அறநிலையத்துறைத் தவறுகளைச் சுட்டிக்காட்ட நவ.5-ல் ஆர்ப்பாட்டம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டி

அறநிலையத்துறைத் தவறுகளைச் சுட்டிக்காட்ட நவ.5-ல் ஆர்ப்பாட்டம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டி

அறநிலையத்துறையில் சில அதிகாரிகள் செய்யும் செயலால் அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுகிறது. அறநிலையத்துறையில் தவறுகளைச் சுட்டிக்காட்டும் வகையில் சென்னையில் வரும் 5-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோபராமானுஜ ஜீயர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “அறநிலையத்துறை அதிகாரிகள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ராமானுஜர் ஏற்படுத்திய வழிகாட்டுமுறைகளை மாற்றி அமைத்துள்ளனர். கோயில் நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட அறநிலையத்துறை ஒத்துழைப்பு அளித்தாலும், சில அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்பட்டு முட்டுக்கட்டைப் போடுகின்றனர். அறநிலையத்துறையினருக்கு கோயில் உள்விவகாரங்களில் தலையிட உரிமையும், அதிகாரமும் இல்லை.

ஸ்ரீரங்கம் கோயிலில் செயல் அலுவலராக இருந்த ஜெயராம், அக்கோயிலில் உற்சவ நாள்களில் விஸ்வரூபத் தரிசனத்திற்குத் தடை, பெருமாளுக்கு நைவேத்யம் செய்வதில் மாற்றம் ஆகியவற்றையும் செய்துள்ளார். இதுபோல் சில அதிகாரிகள் செய்யும் செயலால் தமிழக அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அறநிலையத்துறை தவறுகளைத் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டும்வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர். ஹெச்.ராஜா, முத்தரையர் சங்கத் தலைவர் செல்வகுமார், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் திருமாறன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரும் பங்கேற்கிறார்கள் ”என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in