‘பணமதிப்பு நீக்கத்தை இதற்காகத்தான் கொண்டுவந்தோம்!’- உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சொன்ன விளக்கம்

‘பணமதிப்பு நீக்கத்தை இதற்காகத்தான் கொண்டுவந்தோம்!’- உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சொன்ன விளக்கம்

2016-ல் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக. உச்ச நீதிமன்றத்தில் நேற்று விளக்கமளித்தது மத்திய அரசு. மாறிவரும் பொருளாதாரக் கொள்கையின் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஒன்று எனக் கூறியிருக்கும் மத்திய அரசு அதுதொடர்பான வாதங்களையும் முன்வைத்திருக்கிறது.

2016 நவம்பர் 8-ம் தேதி இரவு 8.15 மணி அளவில், பணமதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி. அதன்படி, அதுவரை புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. புதிதாக 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பழைய நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய நோட்டுகளை வாங்க மக்கள் வங்கிகள் முன்பு வரிசையில் நின்றனர். முறைசாராத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் இதில் பெருமளவு பாதிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.

கறுப்புப் பணம் ஒழிப்பு, பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பது என இந்நடவடிக்கைக்கு மத்திய அரசு முன்வைத்த காரணங்கள் எதிர்க்கட்சிகளால் கேள்விக்குட்படுத்தப்பட்டன. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் 4 முதல் 5 லட்சம் கோடி ரூபாய் வரை வங்கிக்குத் திரும்ப வராது என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், அவற்றில் 99 சதவீத நோட்டுகள் திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி பின்னர் கூறியது. இதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்நிலையில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளித்திருக்கிறது மத்திய அரசு. முறையான பொருளாதாரத்தை விரிவாக்கம் செய்யும் கொள்கையில் இந்த நடவடிக்கை முக்கியமானது என்று கூறியிருக்கும் மத்திய நிதியமைச்சகம், பணமதிப்பு நீக்கத்துக்குப் பின்னர் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்திருப்பதாகவும் கூறியிருக்கிறது. 2016-ம் ஆண்டு முழுவதும், 6,952 கோடி ரூபாய் மத்திப்பிலான 1.09 லட்சம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்ததாகவும், இந்நடவடிக்கையைத் தொடர்ந்து, 2022 அக்டோபர் மாதத்தில் மட்டும் 730 கோடி பரிவர்த்தனைகள், 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நடந்திருப்பதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

கள்ளநோட்டுப் புழக்கம் குறைந்து, வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்னர் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில் நிதியமைச்சகம் குறிப்பிட்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in