ஏற்றுமதித் தடையால் விவசாயிகள் வேதனை: இந்தோனேசியாவிடமிருந்து கற்க வேண்டிய பாடம்!

ஏற்றுமதித் தடையால் விவசாயிகள் வேதனை: இந்தோனேசியாவிடமிருந்து கற்க வேண்டிய பாடம்!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக, இந்தியாவிலிருந்து கோதுமை ஏற்றுமதியை முதலில் அனுமதித்த மத்திய அரசு, உள்நாட்டுச் சந்தையில் விலை உயரத் தொடங்கியதும் ஏற்றுமதிக்கு உடனடியாகத் தடை விதித்திருக்கிறது. இது இந்திய நுகர்வோரின் நலனைக் காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றாலும் விவசாயிகளின் நலனை வெகுவாக பாதிக்கக்கூடியது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அறிக்கை வாயிலாகக் கண்டித்திருக்கிறார். அவர் வெறும் அரசியலுக்காக அப்படிச் சொல்லவில்லை என்பதை மெய்ப்பிக்கின்றன இந்தோனேசிய சிறு விவசாயிகளின் கசப்பான அனுபவங்கள்.

இந்தோனேசிய உதாரணம்

பனை எண்ணெய்யை ஏற்றுமதி செய்யக் கூடாது என்று இந்தோனேசிய அரசு அறிவித்துவிட்டதால் இனி கொள்முதல் செய்வதில் எங்களுக்கென்ன லாபம் என்று எண்ணெய் எடுக்கும் பெரு நிறுவனங்கள் சிறு விவசாயிகளிடம் நேரடியாக வாங்குவதை நிறுத்திவிட்டன. அதேசமயம் அவற்றின் சார்பாகச் செயல்படும் இடைத்தரகர்கள் உற்பத்திச் செலவில் பாதியளவை மட்டுமே விலையாகக் கூறி வாங்க முன்வருகிறார்கள். விற்காமல் வைத்திருப்பதைவிட வந்த விலைக்கு விற்று இழப்பையாவது குறைத்துக்கொள்ளலாம் என்ற விரக்தியான முடிவுக்கு வருகின்றனர் சிறு விவசாயிகள். இதனால் பனை எண்ணெய் சாகுபடியைத் தொடர முடியாமலும் நிறுத்த முடியாமலும் மிகப் பெரிய உளவியல் சிக்கலுக்கும் ஆளாகியுள்ளனர்.

பனை மரம் வளர்க்கும் சிறு விவசாயிகளுக்கு வருமானத்துக்கு வேறு வழிகள் இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் அமலில் இருந்த பொதுமுடக்கம் காரணமாக வருமானத்தை இழந்துவிட்டனர். இப்போதாவது விடிவுகாலம் பிறக்காதா என்று எதிர்பார்த்த வேளையில், உள்நாட்டிலேயே விலை உயர்ந்துவிட்டது என்பதற்காக ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது அரசு. இதில் அரசு தரும் விதிவிலக்குகள் மிகப் பெரிய ஏற்றுமதியாளர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும்தான் வருமானத்தைத் தரும். ஆலை முதலாளிகளும் இடைத் தரகர்களும் சிறு விவசாயிகளை நஷ்டத்துக்கு விற்கச் சொல்லி கசக்கிப் பிழிகின்றனர். இவர்களிடமிருந்து கொள்முதல் செய்யவும் அரசு முன்வரவில்லை.

ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்துவிட்டாலும் சட்டவிரோதமாக ஏற்றுமதி நடக்கிறது. அரசியல் செல்வாக்குள்ளவர்கள் அதை நடத்துகின்றனர். எனவே ஏற்றுமதித் தடையும் முழுமையாக அமலாகவில்லை. அதற்குக் காரணம் அரசு அதிகாரிகளிடம் உள்ள ஊழல். இதனால் சிறு விவசாயிகள் தங்கள் வசமுள்ள பனை எண்ணெய் பழங்களை மிகக் குறைந்த விலையில் விற்றுவிட்டு தங்களுடைய வீட்டுத் தேவைகளுக்காகக்கூட அதிக விலை கொடுத்து எண்ணெய் வாங்க வேண்டியிருக்கிறது! பனை எண்ணெய் எடுக்கும் ஆலைகள் மிகச் சிலதான். அவை ஏகபோக நிறுவனங்களாக இருக்கின்றன. எண்ணெய் ஆலைகளின் எண்ணிக்கை பெருகினால்தான் அவற்றுக்கிடையே போட்டி ஏற்பட்டு ஓரளவுக்காவது விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். ஆலை உரிமையாளர்களின் அரசியல் செல்வாக்கு, அவர்களுடைய ஏகபோகம் தொடரவே உதவும்.

பனம்பழத்துக்கான விலை பாதியாகக் குறைந்துவிட்ட அதே வேளையில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றின் விலை 100 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இது இரட்டை இழப்பை ஏற்படுத்திவிட்டது. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இடுபொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதால் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் உற்பத்திச் செலவு கூடிவிட்டதாக அந்த ஆலைகள் தெரிவிக்கின்றன.

இரண்டு ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் பனை சாகுபடியாளர், இருபது நாட்களுக்கொருமுறை ஒரு டன் முதல் ஒன்றரை டன் வரை எடையுள்ள பனம் பழங்களை அறுவடை செய்கிறார். இந்தோனேசிய அதிபர் ஜோகோவி ஏப்ரல் 22-ல் ஏற்றுமதித் தடை பற்றி அறிவித்தார். அது ஏப்ரல் 28 முதல் அமலுக்கு வருவதற்குள்ளேயே சந்தையில் கொள்முதல் விலையைப் பாதியாகக் குறைத்துவிட்டனர் ஆலை முதலாளிகள். கிழக்கு களிமந்தனில் ஒரு கிலோ புதுப் பழங்களுக்கு இந்தோனேசிய ரூபாயில் 3,000 தடைக்கு முன்னால் கிடைத்துக்கொண்டிருந்தது. தடைக்குப் பிறகு அதுவே சரிந்து இப்போது கிலோவுக்கு 1,700 ரூபாயாக (இந்தோனேசிய ரூபாய்) குறைந்துவிட்டது. கிழக்கு களிமந்தன் ஆளுநர், சந்தையில் இருந்த விலையைக் குறைக்கக் கூடாது என்று ஆலை முதலாளிகளுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியிருந்தார். ஒருவரும் அதை சட்டை செய்யவில்லை. அரசும் கடிதம் எழுதியதோடு சரி தீவிரமாக அதை அமல்படுத்தவில்லை. மொத்தவிலை வியாபாரிகளிடம் கிலோவுக்கு 3,900 ரூபாய் என்று விற்ற பெரிய விவசாயிகள் கூட இப்போது 1,800 ரூபாய்க்கு மேல் விற்க முடியாமல் தவிக்கின்றனர். ஆனால் அரசு நிர்ணயித்துள்ள அதிகாரபூர்வ விலை 2,947 ரூபாய் ஏட்டில் மட்டுமே இருக்கிறது.

புதிய பனைப் பழங்களை வாங்கும் ஆலைகள் எவ்வளவு வாங்கவிருக்கின்றன என்று தெரியவில்லை. ஆனால் சிறு விவசாயிகள் சோறு – தண்ணீர் இல்லாமல் விளைபொருள்களுடன் ஆலை வாசலில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். விலை மேலும் சரிந்துவிடக் கூடாதே என்ற கவலையே அவர்களுக்குப் பெரிதாக இருக்கிறது. சில வகை ரசாயன உரங்களின் விலை 300 சதவீதம் வரையில் உயர்ந்திருக்கிறது. இது ஏன் என்று அரசால் இதுவரைக் கூற முடியவில்லை. 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை உரம் முன்னர் 3 லட்சம் ரூபாயாக இருந்தது இப்போது 10 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இப்படியே போனால் சிறு விவசாயிகளால் எப்படி பனைச் சாகுபடியை மேற்கொள்ள முடியும் என்று கவலைப்படுகின்றனர்.

இந்தத் தடையை விலை உயர்வு மட்டுப்படும் வரையில் ஒரு வாரம் அல்லது இரு வாரங்களுக்கு மட்டும் அமல்படுத்தியிருக்கலாம் இப்படி சிறு விவசாயிகளின் முதுகெலும்பு முறிந்த பிறகும் நீட்டிப்பது நியாயமா என்று பலரும் கேட்கின்றனர். இந்தத் தடையை அரசு விலக்கிக்கொள்ள வேண்டும். அல்லது சிறு விவசாயிகளிடம் தாங்கள் நிர்ணயித்த விலைக்கு வாங்குவதை உறுதிசெய்ய வேண்டும். உரம், பூச்சிக்கொல்லிகளின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது விவசாயிகளுக்கு மானியம் தர வேண்டும்.

இந்தோனேசியாவில் 27 கோடி மக்கள் வசிக்கின்றனர். பனை எண்ணெய் ஏற்றுமதிதான் அந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கியமான ஆதாரம். 1.6 கோடி சிறு விவசாயிகள் எண்ணெய் பனைச் சாகுபடியில்தான் வாழ்கின்றனர். விலைவாசி உயர்வுக்கு எப்போதும் காரணமாக இருப்பது இடைத் தரகர்களும் பதுக்கல்காரர்களும்தான். அவர்களை அடக்கும் வழிமுறைகளைக் கைவிட்டுவிட்டு சாகுபடியாளர்களை வதைக்கும் முடிவுகளையே எப்போதும் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் எடுக்கின்றனர். பெரும்பாலான நாடுகளில் இதுதான் நடைமுறையாக இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் அது எப்படி விவசாயத்துக்கு உதவும், விவசாயிகளை எப்படி வாழவைக்கும், அவர்கள் எப்படித் தங்களுடைய வருவாயை இரட்டிப்பாக்குவது?

இந்தோனேசியா சிறுகுறிப்பு

இந்தோனேசியா குடியரசு நாடு. தென்கிழக்கு ஆசியாவில் இருக்கிறது. இந்திய – பசிபிக் பெருங்கடல்களுக்கு இடைப்பட்ட பிரதேசம். 17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டது. சுமத்ரா, ஜாவா, சுலாவசி ஆகியவை இதன் பெருந்தீவுகள். போர்னியோ, நியூகினி ஆகியவற்றின் பகுதியளவும் இதில் சேரும். உலகிலேயே மிகப் பெரிய தீவு நாடு. பரப்பளவு 19,04,569 சதுர கிலோமீட்டர்கள். மக்கள்தொகை 27 கோடி. முஸ்லிம்கள் பெரும்பான்மையர்கள். மக்கள் தொகையில் பாதிப்பேர் ஜாவா தீவில் வசிக்கின்றனர். உலகிலேயே அதிக மக்கள் தொகை வசிக்கும் தீவு இதுதான்.

இந்தோனேசியாவின் தலைவர் அதிபர் என்று அழைக்கப்படுகிறார், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிதான் நடக்கிறது. 34 மாநிலங்கள் உள்ளன. அவற்றில் ஐந்து சிறப்பு அந்தஸ்து பெற்றவை. பபுவா நியூகினி, கிழக்கு தைமூர், மலேசியாவின் கிழக்கு ஆகியவை இதையொட்டிய நில எல்லையுள்ள நாடுகள். சிங்கப்பூர், வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, பலாவ், இந்தியா ஆகியவற்றுடன் கடல் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது இந்தோனேசியா.

சீனா, இந்தியாவுடன் நெருக்கமான வாணிப, கலாச்சார, ஆன்மிக உறவுகள் கொண்ட நாடு. ஒரு காலத்தில் இந்து, பௌத்த மன்னர்கள் ஆட்சி செய்தனர். சன்னி பிரிவு வியாபாரிகள், சுஃபி அறிஞர்கள் இந்தப் பிரதேசத்தில் இஸ்லாம் பரவக் காரணமாக இருந்தனர். ஐரோப்பிய பாதிரிகள் இங்கே கிறிஸ்தவத்தைப் பரப்பினர். போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷார், டச்சு (ஹாலந்து -நெதர்லாந்து) நாட்டவர்கள் இதை 350 ஆண்டுகள் காலனியாக ஆண்டனர். 1945-ல் இந்தோனேசியா விடுதலை பெற்றது. இந்தியாவைப் போலவே வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. பல்வேறு மொழி, இன, மத மக்கள் வாழும் நாடு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in