மணிப்பூர் தேர்தலில் முக்கியப் பேசுபொருளாகும் ஆஃப்ஸ்பா!

மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா
மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா

ஆஃப்ஸ்பா சட்டத்தை ரத்துசெய்யும் கோரிக்கைதான் மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய மக்கள் கட்சி (என்பிபி) கட்சியின் முக்கிய வாக்குறுதியாக இருக்கும் என அக்கட்சியின் தலைவரும் மேகாலயா முதல்வருமான கான்ராட் சங்மா கூறியிருக்கிறார்.

“மணிப்பூர் மக்களிடமிருந்து எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கடந்த தேர்தலைவிடவும் இந்த முறை இன்னும் சிறப்பாகச் செயல்படுவோம்” எனக் கூறியிருக்கும் சங்மா, இந்தத் தேர்தலில் 30 வேட்பாளர்களை இறுதிசெய்திருப்பதாகவும், அவர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். சூழல் மாறுவதைப் பொறுத்து 40 அல்லது 45 வேட்பாளர்களைக் களமிறக்கவும் அக்கட்சி திட்டமிட்டிருக்கிறது.

மேகாலயாவை மையமாகக் கொண்ட தேசிய மக்கள் கட்சி, மணிப்பூரில் பாஜகவின் கூட்டணி அரசிலும் இடம்பெற்றிருக்கிறது. என்பிபி கட்சியின் சார்பில் மணிப்பூரில் இருவர் அமைச்சர் பதவிவகிக்கிறார்கள். துணை முதல்வரும் என்பிபி கட்சியைச் சேர்ந்தவர்தான்.

இந்நிலையில், மணிப்பூரில் இந்த முறை தனித்தே போட்டியிடத் தீர்மானித்திருக்கிறது என்பிபி.

நாகாலாந்தில் ராணுவத்தினரால் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, ராணுவத்தினருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (ஆஃப்ஸ்பா) ரத்துசெய்ய வேண்டும் எனும் குரல்கள் வட கிழக்கு மாநிலங்களில் பலமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

2018-ல் மேகாலயாவில் இச்சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. எனினும், நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆஃப்ஸ்பா சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று மேகாலயா முதல்வரான சங்மாவும் கோரிவருகிறார்.

நாகாலாந்து சட்டப்பேரவையில் டிச.20-ல் நடந்த சிறப்பு அமர்வின்போது இந்தச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டிசம்பர் 23-ல் உள் துறை அமைச்சர் அமித் ஷாவுடன் வட கிழக்கு மாநில முதல்வர்களின் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் நாகாலாந்து முதல்வர் நெபியூ ரியோ, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, நாகாலாந்து துணை முதல்வர் யாந்துங்கோ பேட்டன் போன்றோர் கலந்துகொண்டனர். ஆஃப்ஸ்பா சட்டத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான ஆய்வை நடத்த ஒரு குழுவை அமைப்பது என அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

எனினும், இதற்கான பணிகள் எப்போது முழுமை பெறும் என எந்தத் தகவலும் இல்லை. அசாம் பாஜக முதல்வரான ஹிமந்த பிஸ்வா சர்மா, “ஆஃப்ஸ்பா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசு கோர முடியாது. அது மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிலையைப் பொறுத்து தீர்மானிக்கப்பட வேண்டும். மாநிலத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பொறுத்துதான் ஆஃப்ஸ்பா சட்டத்தை ரத்துசெய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும்” என்று சில நாட்களுக்கு முன்பு கூறியது சர்ச்சையானது. அதேவேளையில், பாஜகவைச் சேர்ந்தவரான யாந்துங்கோ பேட்டன் இந்தச் சட்டத்தை நீக்கியே ஆக வேண்டும் என உறுதியாக இருக்கிறார்.

இந்தச் சூழலில், மணிப்பூர் தேர்தல் பிரச்சாரத்தில் இந்தச் சட்டம் குறித்த வாக்குறுதிகளும் இடம்பெற்றிருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in