மழையால் அழிந்த விளைச்சல்: உரிய இழப்பீடு பெற்றுத் தர கோரிக்கை

மழையால் சேதம் அடைந்துள்ள விளைச்சல் வயலை பார்வையிடும் பி.ஆர். பாண்டியன்
மழையால் சேதம் அடைந்துள்ள விளைச்சல் வயலை பார்வையிடும் பி.ஆர். பாண்டியன்

காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்துள்ள கனமழையால்  அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்களின்  விளைச்சல் அழிவிற்கு காப்பீடு திட்டத்தின் கீழ் மகசூல் இழப்பிற்கேற்ப உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்  பி.ஆர்.பாண்டியன் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு, வேதாரண்யம், கீழ்வேளூர், கீழையூர், நாகப்பட்டினம்,  திருமருகல் ஒன்றியங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளதை இன்று  நேரில் பார்வையிட்டார். 

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,  "காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவம் மாறி பெய்த பெரும்மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 5 லட்சம் ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் பகுதி பகுதியாக கீழே சாய்ந்து அழிந்துள்ளது.  அனைத்து விவசாயிகளும் 100% காப்பீட்டுக்கான இழப்பீடு பெறும் வகையில் காப்பீடு செய்துள்ளனர்.  சில இடங்களில் மழைக்கு முன் அறுவடை ஆய்வு அறிக்கை முடிந்துள்ளது. ஆனால் இன்னும்  80% இடங்களில் அறுவடை  முடியாமல் மழையில் பாதிக்கப்பட்டுள்ளது.

மழையால் சேதம் அடைந்துள்ள நெல்களை பார்வையிடும் பி.ஆர். பாண்டியன்
மழையால் சேதம் அடைந்துள்ள நெல்களை பார்வையிடும் பி.ஆர். பாண்டியன்

எனவே ஆய்வறிக்கை முடிக்கப்பட்ட கிராமங்களிலும், முடிவுபெறாத கிராமங்களிலும் விவசாயிகளுக்கு மகசூல் இழப்புக்கு ஏற்ப இழப்பீடு பெற்று தருவதற்கு தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி பெற்று தர வேண்டும். பாதிக்கப்பட்ட  விளைநிலங்களை வேளாண்துறை மூலம் உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்டுள்ள  விவசாயிகளுக்கு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து இழப்பீடு வழங்குவதற்கு முதலமைச்சர் முன்வர வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வது மழையால்  பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக 21% ஈரப்பதம் உள்ள நெல்லையும் நிபந்தனை இன்றி கொள்முதல் செய்வதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in