மதிய உணவு திட்டத்தில் சிக்கனை சேர்க்கவும்: மம்தாவை பின்பற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை

மதிய உணவு திட்டத்தில் சிக்கனை சேர்க்கவும்: மம்தாவை பின்பற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை

``மேற்கு வங்கத்தில் மதிய உணவு திட்டத்தில் சிக்கன் உணவு சேர்க்கப்பட்டுள்ளது. இதே போல் தமிழகத்திலும் சிக்கன் உணவு சேர்க்க வேண்டும்'' என கறிக்கோழி பண்ணை தொழில்முனைவோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது சுமார் 43 ஆயிரம் பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுகிறது. இதன் மூலம் 49.85 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுகிறார்கள். இந்த திட்டங்களுடன் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் 417 மாநகராட்சி பள்ளிகள், 163 நகராட்சி பள்ளிகள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகள், 237 தொலைதூர, மலைப்பிரதேச பள்ளிகள் என மொத்தம் 1,545 பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவியர்களுக்கு தினமும் காலை உணவு பரிமாறப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 37 தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 5 ஆயிரத்து 941 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய உணவு திட்டத்தில் புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளார். அதன்படி, தற்போது வழங்கப்படும் உணவுகளுடன் கூடுதலாக சிக்கன் மற்றும் பழங்களை மத்திய உணவில் வழங்க போவதாக அறிவித்துள்ளார். அங்கு மத்திய உணவு திட்டத்தின் கீழ் சுமார் 1.16 கோடிக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகிறார்கள் என கூறப்படுகிறது.  தற்போது சாதம், பருப்பு, காய்கறி, சோயாபீனஸ், முட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன.

சிறார்களின் ஊட்டச்சத்தை கருத்தில் கொண்டு சிக்கன் சேர்க்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை வாரம் தோறும் சிக்கன் மற்றும் பழங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என மேற்கு வங்க மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் மேலும் வளர்ச்சியடையும்.

தமிழகத்தில் இதே போன்று மதிய உணவு திட்டத்தில் சிக்கன் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கோவை மாவட்டத்தில் 2,500 கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கறிக்கோழி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் தனியார் கோழி வளர்ப்பு நிறுவனங்களிடம் இருந்து தரப்படும் கோழிக் குஞ்சுகளை வளர்த்து வருகின்றனர்.

தமிழகத்தில் மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் கேரளாவிற்கு மாதம் ஒன்றுக்கு சராசரியாக 2 கோடி கிலோ கோழிகள் அனுப்பபடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக, ஆந்திரா மாநிலங்களுக்கும் கறிக்கோழிகள் அனுப்பப்டுகின்றன. தமிழக அரசு மதிய உணவு திட்டத்தில் சிக்கன் உணவை கொண்டுவந்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும், மேலும் கறிக்கோழி பண்ணைகள் வளர்ச்சியடையும்.

இதுகுறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளர் சின்னசாமி கூறுகையில்,  ``தமிழகத்தில் தினமும் 10 லட்சம் கோழி குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்கள் தான் தமிழகத்தின் கறிக்கோழிகள் உற்பத்தியில் 75 சதவீதம் பங்கு வகிக்கின்றனர். தினமும் 5 லட்சம் கோழிகள் தமிழகம், கேரளா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் விற்பனை ஆகின்றன. இத்துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தமிழக அரசு மதிய உணவு திட்டத்தில் சிக்கன் உணவு கொண்டு வந்தால் கறிக்கோழி தொழில் வளர்ச்சியடையும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்'' என்றார்.

கறிக்கோழி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் மேலும் சிலர் கூறுகையில்,  ``இத்தொழிலை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. விவசாயிகள் பலரும் இத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு காரணங்களினால் சில சமயங்களில் இத்தொழிலில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவ்வப்போது விலை ஏறும், இறங்கும் இதனால் கறிக்கோழி வளர்ப்போருக்கும் வருவாய் குறையும். தமிழக அரசு மதிய உணவு திட்டத்தில் சிக்கனை கொண்டு வந்தால் எப்போதும் வேலைவாய்ப்பு இருக்கும். விலை ஏற்றம், இறக்கம் போன்றவைகளையும் சமாளிக்க முடியும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in