மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி வாராந்திர ரயில் நிறுத்தப்படுகிறது: பயணிகள் அதிர்ச்சி

மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி வாராந்திர ரயில் நிறுத்தப்படுகிறது: பயணிகள் அதிர்ச்சி

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வந்த  சிறப்பு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்  எதிர்வரும் 27-ம் தேதியுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதனை மீண்டும் நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு திருநெல்வேலிக்கு  சிறப்பு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, திண்டுக்கல், மதுரை, சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, அம்பாசமுத்திரம் வழியாக திருநெல்வேலியை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை இரவு புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலை மேட்டுப்பாளையம் சென்றடைகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த சிறப்பு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்தது.

தொடர்ந்து இந்த ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ரயில்வே பயணிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில் இந்த ரயில் சேவையை ஜனவரி 27-ம் தேதி வரை நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

தென்மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் உயர்கல்வி கற்பதற்காக கோவை வந்து தங்கி கல்வி பயில்கின்றனர். இவர்களுக்கு இந்த ரயில் சேவை மிகவும் ஏற்றதாக அமைந்திருந்தது.  இந்த சிறப்பு வாராந்திர ரயில் சேவை மூலம் தெற்கு ரயில்வேக்கு 1 கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது.

வருகிற 27-ம் தேதி பழநி பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 17 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பழநிக்கு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள்.  கும்பாபிஷேகத்தை காண 2000 பேருக்கு மட்டுமே கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மண்டல பூஜைகளில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழநிக்கு பக்தர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பார்கள். மேலும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி தைப்பூசம் வர இருப்பதால் பழநி-க்கு பக்தர்களின் வருகை கூடுதலாக இருக்கும்.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் -திருநெல்வேலி இடையேயான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை வரும் 27-ம் தேதி உடன் நிறைவு பெறுவதால் தென் மாவட்ட மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாவார்கள். பக்தர்கள் மட்டுமல்லாது மாணவ-மாணவிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இது பெரிதும் பயன் அளிப்பதாக இருப்பதால்  இந்த ரயில் சேவையை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என வியாபாரிகள், பக்தர்கள் மற்றும் மாணவர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in