பாஸ்போர்ட் பறிப்பு, பலவந்தப்படுத்தி பாலியல் தொழில்: மீட்கப்பட்ட உஸ்பெகிஸ்தான் பெண்கள்!

பாஸ்போர்ட் பறிப்பு, பலவந்தப்படுத்தி பாலியல் தொழில்: மீட்கப்பட்ட உஸ்பெகிஸ்தான் பெண்கள்!

நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என ஆசைவார்த்தை காட்டி உஸ்பெகிஸ்தான் பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் வேலை வாங்கி கொடுப்பதாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 7 பெண்களை எம்பவரிங் ஹியுமானிட்டி தொண்டு நிறுவனம் மீட்டுள்ளது. அந்நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் வேலை என உறுதியளிக்கப்பட்டு உஸ்பெகிஸ்தானிலிருந்து சுற்றுலா மற்றும் மருத்துவ விசாக்களில் அழைத்து வரப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபட வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் 2019-ம் ஆண்டு சுற்றுலா விசாவில் இந்தியா வந்ததும், அப்போது பாஸ்போர்ட்டை முகவர்கள் பறித்துக் கொண்டு அவர்கள் சொல்லும் வேலையை செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதும் காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாலியல் தொழிலில் தள்ளப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதும், போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாககவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பித்த 7 பெண்களும் போதிய ஆவணங்கள் இல்லாமல் உஸ்பெகிஸ்தான் தூதரகம் செல்ல முடியாமல் தவித்துள்ளனர். உள்ளூர் மொழி தெரியாமல் தவித்து வந்த அவர்களை தொண்டு நிறுவனம் மீட்டுள்ளது. இது தொடர்பாக 5 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் கடந்த ஜூலை மாதம் உஸ்பெகிஸ்தான் பெண்களைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட கும்பலிடமிருந்து 11 பெண்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in