
டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு காரணமாக பள்ளி வகுப்பறை செயல்பாடுகளை மீண்டும் ஆன்லைன் ஏற்பாடுகளுக்கு மாற்றுமாறு முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
காற்று மாசுபாடு என்பதில் உலகின் தலைநகராகும் வேகத்தில் தேசத்தின் தலைநகர் டெல்லி சீரழிந்து வருகிறது. மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கும் காற்று மாசு குறித்து பல திசையிலும் அங்கலாய்ப்புகள் அதிகரித்துள்ளன. கோடை காலத்தைவிட குளிர் காலத்தில் பல மடங்கு கூடும் மாசு, நடப்பாண்டு அதன் தாக்குதலை வீரியமாக தொடங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய மனித உரிமைகள் ஆணையம் தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளது. நவ.10 அன்று இதன் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமை செயலர்களுக்கு அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளது.
நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை கொளுத்த தீவிர தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியவர்களை ‘அந்த செலவில் இனிப்புகள் வாங்கி சாப்பிடுங்கள்’ என்ற அறிவுரையுடன் திருப்பி அனுப்பப்பட்டார்கள். காற்று மாசு காரணமாக அதிகளவில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படுவதை அடுத்து டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். முதியவர்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதால், பள்ளிக்காக வெளியில் சென்று திரும்பும் குழந்தைகள் நலனுக்கு இந்த புதிய உத்தரவில் முக்கியத்துவம் தந்துள்ளார்.
இதன்படி தொடக்க பள்ளிகள் அனைத்தும் தங்களது கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை ஆன்லைன் ஏற்பாடுகளுக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் 5ஆம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவ மாணவியரின் வகுப்புக்கு வெளியிலான பள்ளி செயல்பாடுகளுக்கும் தடை விதித்துள்ளார். டெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசு குறையும் வரை இந்த ஏற்பாடுகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, அனைத்து அரசு அலுவலகங்களின் 50 சதவீத ஊழியர்களை சுழற்சி முறையில் வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிட்டும், அத்தியாவசியம் அல்லாத கனரக சரக்கு வாகனங்கள் டெல்லி நுழைய தடை விதித்தும் டெல்லி அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.