டெல்லியை உலுக்கிய பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

டெல்லியை உலுக்கிய பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

நாளை முதல் வேலை நிறுத்தத்தில் இறங்கப்போவதாக மருத்துவ சங்கங்கள் எச்சரிக்கை

டெல்லியில் நேற்று (டிச.27) பயிற்சி மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தின்போது, போலீஸார் அத்துமீறி நடந்துகொண்டதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன. தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் மருத்துவ சங்கங்கள் எச்சரித்திருக்கின்றன.

நீட் முதுநிலை நுழைவுத் தேர்வுக்குப் பிறகான கவுன்சிலிங் மற்றும் கல்லூரி சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகப் பயிற்சி மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பு (ஃபோர்டா) கடந்த ஒரு மாதமாகப் போராட்டம் நடத்திவருகிறது. போதிய மருத்துவர்கள் இல்லாததால், கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாவதாகத் தெரிவித்திருக்கும் அவர்கள், புதிய பயிற்சி மருத்துவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் எனக் கோரிவருகிறார்கள்.

மருத்துவக் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், புதிய மருத்துவர்களை நியமனம் செய்யும் பணிகள் கடந்த ஓராண்டாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தச் சூழலில், கவுன்சிலிங்கில் தாமதம் தொடர்வதால், மருத்துவக் கல்லூரிகளில் பலர் மேற்படிப்பில் சேர முடியவில்லை எனப் பயிற்சி மருத்துவர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

தங்கள் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கவில்லை என்றால், கூட்டாக ராஜினாமா செய்யப்போவதாகவும் பயிற்சி மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவின் இல்லத்தை நோக்கிப் பேரணி நடத்த பயிற்சி மருத்துவர்கள் முயன்றனர். அப்போது, காவலர்கள் தங்களைத் தடுத்து நிறுத்தியதாகவும் அதில் சில பயிற்சி மருத்துவர்கள் காயமடைந்ததாகவும் பயிற்சி மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துப் போராட்டத்தில் இறங்கினர்.

பெண் மருத்துவர்களை ஆண் காவலர்கள் கண்ணியக் குறைவாக நடத்தியதாகவும், இழுத்துச் சென்று காவல் துறை வாகனங்களில் ஏற்றியதாகவும் பயிற்சி மருத்துவர்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். காவலர்கள் தங்கள் மீது அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறியிருக்கும் பெண் மருத்துவர்கள், மருத்துவர் சமூகத்துக்கு இது ஒரு கறுப்பு தினம் என்று கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால், ஐடிஓ சாலையில் பயிற்சி மருத்துவர்கள் நடத்திய போராட்டம், ஏறத்தாழ 8 மணி நேரம் நீடித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டும் பயிற்சி மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்ததாகவும் டெல்லி போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். அத்துடன், சில காவலர்களின் சீருடையைப் பயிற்சி மருத்துவர்கள் கிழிக்க முயன்றதாகவும், போலீஸாரின் வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் டெல்லி போலீஸர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் 12 பேரைக் கைதுசெய்த போலீஸார், பின்னர் அவர்களை விடுவித்துவிட்டனர். இதற்கிடையே, கைதுசெய்யப்பட்ட மருத்துவர்கள் வைக்கப்பட்டிருந்த சரோஜினி நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். அங்கு கூடியிருந்த ஏறத்தாழ 4,000 பேரும் கைதுசெய்யப்பட்டதாகச் செய்தியாளர்களிடம் சில மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் டெல்லியில் அமல்படுத்தப்பட்டிருக்கும் இரவு நேர ஊரடங்கு உத்தரவுக்கு இணங்க, போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தனர்.

இதையடுத்து, நாளை (டிச.29) முதல் மருத்துவப் பணிகள் அனைத்தையும் நிறுத்தும் வகையில் போராட்டம் நடத்த, நாட்டில் உள்ள பயிற்சி மருத்துவர் சங்கங்களுக்கும், மருத்துவர் சங்கங்களுக்கும் அனைத்திந்திய மருத்துவ சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. பயிற்சி மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்புக்கு எய்ம்ஸ் பயிற்சி மருத்துவர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்திருக்கிறது. 24 மணி நேரத்தில் அரசிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால், அவசரகால மருத்துவப் பணிகள் தவிர பிற அனைத்து மருத்துவப் பணிகளையும் நிறுத்திவைக்கப்போவதாகவும் எய்ம்ஸ் பயிற்சி மருத்துவர்கள் சங்கம் எச்சரித்திருக்கிறது.

தங்கள் எதிர்ப்பைக் காட்டும்விதமாக, மருத்துவர்கள் அணியும் வெள்ளை மேலாடையைப் பல மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் திருப்பித் தந்துவிட்டதாகவும் ஃபோர்டா அமைப்பின் தலைவர் மனிஷ் நிகம் கூறியிருக்கிறார்.

மருத்துவர்களின் போராட்டத்தின் காரணமாக டெல்லி சஃப்தர்ஜங், ஆர்.எம்.எல், லேடி ஹார்டிங் போன்ற அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அவதிக்குள்ளானதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பயிற்சி மருத்துவர்கள் மீதான காவல் துறையினரின் நடவடிக்கைகளுக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in