அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு அதிரடி சம்பள உயர்வு!

பணம்
பணம்அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு அதிரடி சம்பள உயர்வு!

டெல்லியில் முதல்வர், அமைச்சர்கள், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 67 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 12 வருடங்களுக்குப் பிறகு இப்போது டெல்லி மக்கள் பிரதிநிதிகளுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

டெல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் இதுவரை ரூ.54,000 சம்பளம் பெற்று வந்த நிலையில், பிப்ரவரி 2023 முதல் அவர்களுக்கு மாதம் ரூ.90,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல முதலமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், தலைமைக் கொறடா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் மாத சம்பளம் மற்றும் படிகள் 72,000 ரூபாயில் இருந்து 1.7 லட்சமாக உயர்ந்துள்ளது.

டெல்லி அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை கடந்த மார்ச் 9ம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் மற்றும் படிகள் உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. கடந்த ஆண்டு, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பிறரின் சம்பளம் மற்றும் படிகளை 66.67 சதவீதம் உயர்த்துவதற்கான ஐந்து மசோதாக்களை டெல்லி சட்டசபை நிறைவேற்றியது. இதற்கு பாஜக எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் அந்த முன்மொழிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

தற்போது டெல்லி எம்எல்ஏக்களின் அடிப்படை சம்பளம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும், தொகுதி உதவித்தொகை ரூ. 18,000 லிருந்து ரூ. 25,000 ஆகவும், போக்குவரத்து உதவித்தொகை ரூ. 6,000 லிருந்து ரூ. 10,000 ஆகவும், தொலைபேசி கட்டணம் ரூ. 8,000 லிருந்து ரூ. 10,000 ஆகவும், செயலக உதவித்தொகை ரூ. 10,000 லிருந்து ரூ. 15,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், தலைமைக் கொறடா, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு அடிப்படை சம்பளம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இவர்களின் தொகுதி உதவித்தொகை ரூ. 18,000 லிருந்து ரூ. 30,000 ஆகவும், சப்சுவரி உதவித்தொகை ரூ 4,000 லிருந்து ரூ. 10,000 ஆகவும், தினசரி உதவித்தொகை ரூ. 1,000 லிருந்து ரூ 1,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு செயலக உதவியாக ரூ 25,000 வழங்கப்படும்.

கூடுதலாக, இவர்களுக்கு குடும்பத்துடன் ஆண்டுக்கு 50,000 ரூபாயாக இருந்த பயணப்படி ரூ 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதத்திற்கு ரூ. 20,000 வாடகை இல்லா வசதிகளுடன் கூடிய தங்குமிடம், டிரைவருடன் காரை இலவசமாகப் பயன்படுத்துதல் அல்லது போக்குவரத்துக் கட்டணம் மாதாந்திர ரூ. 10,000 (முன்பு ரூ. 2,000), மற்றும் இலவச மருத்துவ சிகிச்சை ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

2015ம் ஆண்டில், ஆம் ஆத்மி அரசு எம்எல்ஏக்களின் சம்பளத்தை மாதம் ஒன்றுக்கு ரூ 2.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஒரு முன்மொழிவை அனுப்பியிருந்தது, ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in