
டெல்லியில் இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் யூடியூப் வீடியோக்களை மெட்ரோ ரயிலில் எடுப்பதற்கு டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பினை அடுத்து, நாட்டின் இதர மெட்ரோ ரயில் நிர்வாகங்களும் இதனை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மெட்ரோ பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இளம் தலைமுறையினர் மத்தியில் சமூக ஊடகங்களில் குறு வீடியோக்களை வெளியிடுவது அதிகரித்து வருகிறது. இளசுகளின் ஆர்வத்தை பயன்படுத்தி குறு வீடியோக்களை மையமாகக் கொண்ட புதிய சமூக ஊடக செயலிகளும் பெருகி வருகின்றன. இது தவிர யூடியூப் வாயிலாக சம்பாதிக்க விரும்புவோரும் பொது இடங்களில் வீடியோ எடுத்து லைக், ஷேர் கமெண்ட் என காசு பார்க்கின்றனர்.
இவர்கள் அனைவருமே சக பயணிகள் மற்றும் பொதுமக்களை பொருட்படுத்துவதில்லை. ஓடும் ரயிலில் குத்தாட்டம் போட்டு அதனை வீடியோ எடுப்பது, சக பயணிகளுக்கு தொந்தரவாகும் என்பதை இளசுகள் உணர்வதே இல்லை. இது தவிர தங்கள் அனுமதியின்றி மூன்றாம் நபரின் வீடியோவில் தாங்கள் இடம்பெறுவதையும் அதன் மூலம் தங்கள் தனியுரிமை பாதிக்கப்படுவது குறித்தும் வெகுமக்கள் புலம்பி வந்தனர்.
அவர்களுக்கு செவி சாய்த்ததுபோல, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகத்தில் ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்கள் எடுப்பது தடை செய்யப்படுகிறது. மேலும் கேமராக்களை கொண்டு சக பயணிக்கு தொந்தரவளிக்கும் எந்த செய்கையும் கூடாது என கண்டிப்பு காட்டியுள்ளது.
இதற்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு எழுந்துள்ளது. நாட்டின் இதர மெட்ரோ ரயில்களிலும் இந்த உத்தரவு அமலாக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.