விமான நிலையத்தில் துப்பாக்கிக் குண்டு: வித்தியாசமான தண்டனை பெற்ற ஆசிரியர்!

விமான நிலையத்தில் துப்பாக்கிக் குண்டு: வித்தியாசமான தண்டனை பெற்ற ஆசிரியர்!

டெல்லியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், விமான நிலையத்துக்குத் துப்பாகிக்குண்டு எடுத்துச்சென்றதாக சமீபத்தில் கைதுசெய்யப்பட்டார். அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு வித்தியாசமான தண்டனையை வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.

அசம்பாவிதங்களைத் தவிர்க்க, விமான நிலையங்களில் கடும் பாதுகாப்பு சோதனை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரிடம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, அவரது பையில் துப்பாக்கிக் குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஆயுதங்கள் சட்டம் (1959) 25-வது பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது, தான் உத்தராகண்டின் சமோலி நகரில் பள்ளியில் படித்த காலத்தில் சாலையில் அந்தக் குண்டுகளைக் கண்டெடுத்ததாகவும், அதை இத்தனை ஆண்டுகளாக விளையாட்டாகத் தன் வசம் வைத்திருந்ததாகவும், தற்செயலாக விமான நிலையத்துக்கு அதை எடுத்துச்சென்றுவிட்டதாகவும் அந்த ஆசிரியர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி ஜஸ்மீத் சிங், அந்த ஆசிரியருக்கு வித்தியாசமான தண்டனை வழங்க முடிவெடுத்தார்.

அதன்படி, அந்த ஆசிரியர் தனது பள்ளியிலேயே தினம் இரண்டு மணி நேரம் கூடுதல் வகுப்புகளை ஒரு மாத காலத்துக்கு நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அந்தப் பகுதியில் வசிக்கும் ஆரம்பப் பள்ளி மாணவர்களில், படிப்பில் பின்தங்கியவர்களுக்கு இந்த வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்த அவர், இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பள்ளி தலைமை ஆசிரியருக்கும், பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கும் உத்தரவிட்டிருக்கிறார். ஆசிரியர் மீதான முதல் தகவல் அறிக்கையையும் அவர் ரத்து செய்திருக்கிறார்.

இந்தத் தீர்ப்பின் மூலம் காவல் துறையின் பயனுள்ள நேரத்தை வேறு முக்கியப் பணிகளுக்காகப் பயன்படுத்த முடியும் என்றும், அந்த ஆசிரியர் சமூகத்துக்கு நல்லது செய்ய வாய்ப்பளிக்கப்படுகிறது என்றும் நீதிபதி ஜஸ்மீத் சிங் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in