ஐஸ்வர்யா ராய் மகள் தொடுத்த வழக்கு; யூடியூப் சேனல்களுக்கு எதிராக சாட்டையைச் சொடுக்கிய நீதிமன்றம்!

தாய் ஐஸ்வர்யா ராயுடன் ஆராத்யா
தாய் ஐஸ்வர்யா ராயுடன் ஆராத்யா

ஐஸ்வர்யா ராய் பச்சனின் மகள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், ஆட்சேபகரமான வகையில் வீடியோக்களை வெளியிடும் தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக நீதிபதிகள் சாட்டையை சொடுக்கி இருக்கின்றனர்.

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சனின் ஒரே மகளாக பள்ளியில் பயின்று வருபவர், 11 வயது சிறுமியான ஆராத்யா பச்சன். இவர் குறித்து பரபரப்பு செய்தி வெளியிடுகிறோம் பேர்வழிகள் என சில இணையதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் உண்மைக்கு புறம்பான, முற்றிலும் அவதூறான தகவல்களை பதிந்து வந்தன. ஆராத்யாவுக்கு கொடிய நோய் இருப்பதாகவும், அவர் நடக்கவே முடியாது தவிப்பதாகவும், தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியிட்டு வந்தன. இதன் உச்சமாக ஐஸ்வர்யா ராய் மகள் இறந்து விட்டதாகவும் சில யூடியூப் சேனல்கள் செய்தி வெளியிட்டன. தங்களது செய்திக்கு தோதாக மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களையும் பயன்படுத்தி வந்தன.

ஆராத்யா குறித்து வெளியான போலி செய்திகளில் சில..
ஆராத்யா குறித்து வெளியான போலி செய்திகளில் சில..

ஆராத்யா குறித்தான போலி செய்திகள் குறித்து பச்சன் குடும்பம் வெகுவாக வருத்தம் கொண்டது. இது தொடர்பாக ஆராத்யாவின் தந்தையான நடிகர் அபிஷேக் பச்சன், “நாங்கள் பொதுவாழ்க்கையில் இருக்கிறோம். அதனால் எங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள்; அவற்றை எதிர்கொள்கிறோம். ஆனால் எங்களுடைய மகள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு சிறுமி குறித்து அவதூறுகளை பரப்பாதீர்கள்” என்று தன்மையாக கோரிக்கை வைத்துப் பார்த்தார். ஒரு கட்டத்தில் ஆக்ரோஷமாகி, ’என் எதிரில் நின்று பேசுங்கள்’ என்றும் சீற்றம் காட்டினார்.

ஆனால் ஆராத்யாக்கு எதிரான அவதூறுகள் மேலும் அதிகரிக்கவே, வேறுவழியின்றி பச்சன் குடும்பத்தினர் தற்போது நீதிமன்ற உதவியை நாடி இருக்கிறார்கள். தந்தை அபிஷேக் பச்சன் வாயிலாக, சிறுமி ஆராத்யா தொடுத்த வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சி.ஹரிசங்கர் கடுமையான வாசகங்களில் சிலவற்றை சுட்டிக்காட்டினார்.

“சாமானியரோ அல்லது பிரபலமோ, உரிய கண்ணியம் மற்றும் மரியாதையோடு வாழ்வதற்கு ஒவ்வொரு குழந்தைக்கும் இங்கே உரிமை இருக்கிறது. ஒரு குழந்தையின் உடல் மற்றும் மன நலம் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை இப்படி பொதுவெளியில் பரப்புவதை ஒருக்காலும் சகித்துக்கொள்ள முடியாது” என்று நீதிபதி கடுமை காட்டினார்.

மேலும் இந்த செய்திகள் வெளியான இணையதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு நோட்டிஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பாக பதில் தெரிவித்த கூகுள் நிறுவனம், ’யூடியூப் வீடியோவின் உள்ளடக்கம் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், அதே வேளையில் குழந்தை பாலியல் உள்ளிட்ட மோசமான உள்ளடங்களுக்கு எதிராக தாங்கள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும்’ ஒரு விளக்கத்தை அளித்தது.

வழக்கின் விசாரணை நாளையும் தொடர உள்ள சூழலில், ’ஆராத்யாவுக்கு எதிராக செய்தி வெளியிட்ட இணையதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களை முடக்கவும்’ கூகுள் நிறுவனத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in