தொடரும் காற்று மாசு அவலம்... உலக நாடுகளின் மிகவும் மாசுற்ற தலைநகரானது டெல்லி

டெல்லி - காற்று மாசு
டெல்லி - காற்று மாசு

உலக நாடுகளின் தலைநகரங்கள் மத்தியில் மிகவும் மோசமான காற்றின் தரம் கொண்டதாக டெல்லி அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் உலகின் மிகவும் மாசுற்ற பெருநகரப் பகுதி என்ற அடையாளம் பீகார் மாநிலம் பெகுசராய்க்கு சேர்ந்திருக்கிறது.

உலகளவிலான காற்றின் தர அளவுகளை மதிப்பிடும் சுவிட்சர்லாந்தின் ’ஐக்யூஏர்’ என்ற அமைப்பு தற்போது வெளியிட்டுள்ள 2023-ம் ஆண்டின் உலக காற்று தர அறிக்கை இதனை தெரிவித்துள்ளது.

காற்று மாசு அளவை மதிப்பிட பயன்படும் ’பிஎம்2.5 செறிவு’ என்பது கன மீட்டருக்கு 54.4 மைக்ரோகிராம் என்றளவிலான மாசு உடன், 2023-ம் ஆண்டின் மிக மோசமான காற்று மாசுற்ற நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. முதல் இரு இடங்களையும் இந்தியாவின் அண்டை தேசங்களே பிடித்துள்ளன. கன மீட்டருக்கு 79.9 மைக்ரோகிராம் என்ற மாசுடன் வங்காளதேசம் முதலிடம் வகிக்கிறது; கன மீட்டருக்கு 73.7 மைக்ரோகிராம் என்றளவில் பாகிஸ்தான் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

டெல்லி காற்று மாசு
டெல்லி காற்று மாசு

இவ்வாறு 134 நாடுகளை உள்ளடக்கிய மாசுற்ற நாடுகளின் பட்டியலில், இந்த 2 அண்டை தேசங்களுக்கும் அப்பால் இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இதுவே முந்தைய 2022-ம் ஆண்டின் பட்டியலில், கனமீட்டருக்கு 53.3 மைக்ரோகிராம் பிஎம்2.5 செறிவுடன் இந்தியா எட்டாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று உலகளவிலான மெட்ரோபாலிடன் நகரங்களின் வரிசையில் பீகார் மாநிலத்தின் பெகுசராய், கனமீட்டருக்கு 118.9 மைக்ரோகிராம் பிஎம்.2.5 செறிவுடன் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நகரம் 2022-ம் ஆண்டின் பட்டியலில் இடம் வகிக்காத நிலையில், திடீரென அதிகரித்த மாசு காரணமாக உலகளவில் முதலிடம் பிடித்து அதிர்ச்சி தந்துள்ளது.

முந்தைய 2022-ம் ஆண்டு பட்டியலில், தேசத்தின் தலைநகர் டெல்லியின் பிஎம்2.5 செறிவானது ஒரு கன மீட்டருக்கு 89.1 மைக்ரோகிராம் என்றளவில் இருந்தது. அதிலிருந்து மேலும் மாசு அளவு அதிகரித்ததில் தற்போதைய 2023 பட்டியலில் ஒரு கன மீட்டருக்கு 92.7 மைக்ரோகிராமாக மோசமடைந்துள்ளது. முன்னதாக 2018-ம் ஆண்டில் தொடங்கி, உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் டெல்லி முதலிடம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

136 கோடி மக்கள்தொகையை கொண்ட இந்தியாவுக்கு, உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த பிஎம்2.5 செறிவுக்கான வருடாந்தர வழிகாட்டி அளவை, கன மீட்டருக்கு 5 மைக்ரோகிராம் அதிகமான மாசுடன் இந்தியர்கள் திணறி வருவதாக தற்போது வெளியாகி இருக்கும் காற்று மாசு அறிக்கை விளக்குகிறது.

மேலும், இந்திய மக்கள் தொகையில் 96 சதவீதம் பேர்(133 கோடி மக்கள்), உலக சுகாதார அமைப்பு பரிந்துரைந்த காற்று மாசு செறிவைவிட 7 மடங்கு அதிகமான மாசு உடன் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் போக்கு இந்திய நகரங்களின் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. அதிலும் நாட்டின் 66 சதவீதத்திற்கும் அதிகமான நகரங்கள், ஆண்டு சராசரியாக ஒரு கன மீட்டருக்கு 35 மைக்ரோகிராம்கள் அதிகமான மாசு அளவுடன் இருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

நீரிழிவு நோயாளிகளை பாதிக்கும் காற்று மாசு
நீரிழிவு நோயாளிகளை பாதிக்கும் காற்று மாசு

காற்றில் பிஎம்2.5 காற்று மாசுபாட்டின் செறிவு அதிகரிப்பது, ஆஸ்துமா, புற்றுநோய், பக்கவாதம் மற்றும் நுரையீரல் நோய் உட்பட பல சுகாதார கேடுகளுக்கு வழிவகுக்கிறது. மாசுற்ற காற்றில் நிறைந்திருக்கும் நுண்ணிய துகள்களின் வெளிப்பாடு, குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியை நேரிடையாக பாதிக்கக்கூடும். இதுவே மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். நீரிழிவு உள்ளிட்ட ஏற்கனவே உள்ள நோய்களை மேலும் சிக்கலாக்கக்கூடும்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகளவிலான 70 லட்சம் அகால மரணங்களுக்கு காற்று மாசுபாடு காரணமாகிறது. உலகளவில் நிகழும் ஒன்பது மரணங்களில் ஒன்று காற்று மாசுபாடு காரணமாக நிகழ்ந்து வருகிறது. எனவே இந்தியாவும் அதன் மக்களும் காற்று மாசு அளவை குறைப்பதற்கான செயல்பாடுகளில் இறங்குவது, நம்மையும் வரும் தலைமுறையினரின் ஆரோக்கியத்துக்கு காத்திருக்கும் அச்சுறுத்தலையும் போக்க உதவும்.

இதையும் வாசிக்கலாமே...

வாடிக்கையாளர்களுக்கு இன்று தான் கடைசி நாள்... பஞ்சாப் வங்கி எச்சரிக்கை!

வாயில் தீ கொண்டு ஓவியர் வரைந்த' தல' படம்... வைரலாகும் மாஸ் வீடியோ!

சவுக்கு சங்கர் மீது சாட்டையைச் சொடுக்கிய உயர் நீதிமன்றம்... வீடியோ வருமானத்தை செலுத்த உத்தரவு!

பெங்களூருவில் மீண்டும் பரபரப்பு... பள்ளி அருகே ஏராளமான வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

சிட்டிங் எம்பி-க்கள் 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு... பரபரக்கும் திமுக வேட்பாளர் பட்டியல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in