
வாடிக்கையாளருக்கு இன்சூரன்ஸ் பாலிசியை உரிய நேரத்தில் வழங்காத தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குமரிமாவட்டம், குளவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் நெல்சன். இவர் குளச்சலில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் வீட்டுக் கடன் வாங்கினார். இதற்காக அவரிடம் வீட்டின் பாதுகாப்பு என்னும் பெயரில் இன்சூரன்ஸ் பாலிசி ஒன்றும் எடுக்கச் சொல்லி வங்கி தரப்பினர் வலியுறுத்தினர். நெல்சனும் 34 ஆயிரம் ரூபாய் செலுத்தி அதை எடுத்தார். ஆனால் இன்சூரன்ஸ் பாலிசி செலுத்திய ரசீதையும், அதற்குரிய பாலிசியையும் வங்கித் தரப்பு தரவில்லை. நெல்சன் பலமுறை நேரில் போய் கேட்டும் அது வழங்கப்படவில்லை.
இதுதொடர்பாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியும் வங்கி தரப்பு உரிய பதில் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து குமரிமாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நெல்சன் வழக்குத் தொடுத்தார். குமரிமாவட்ட நுகர்வோர் ஆணையத்தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் இதை விசாரித்தனர். இதில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி, குளச்சல் மெயின்ரோட்டில் இயங்கும் அந்த நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியின் சேவைக் குறைபாட்டைச் சுட்டிக்காட்டி நெல்சனுக்கு பத்தாயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் சுட்டிக் காட்டினர். மேலும், வழக்குச் செலவுத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் தனியாக வழங்கவும் அறிவுறுத்தினர்.
மேலும், ஒருவாரக் கால்த்திற்குள் நெல்சனுக்கு பாலிசியைக் கொடுக்க வேண்டும். அல்லது 34 ஆயிரம் ரூபாயைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவு இட்டனர்.