‘அமைச்சரவையின் அனுமதி இல்லாமலேயே ஆயுத இறக்குமதி செய்யலாம்’ - ராஜ்நாத் சிங் உத்தரவின் பின்னணி என்ன?

‘அமைச்சரவையின் அனுமதி இல்லாமலேயே ஆயுத இறக்குமதி செய்யலாம்’ - ராஜ்நாத் சிங் உத்தரவின் பின்னணி என்ன?

தரைப்படை, விமானப் படை, கடற்படை என இந்திய ராணுவத்தின் முப்பிரிவுகளுக்கும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு முக்கியமான அனுமதியை வழங்கியிருக்கிறார். அதன்படி, அவசரகாலக் கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றி வெளிநாடுகளிடமிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்துகொள்ள முப்படைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. என்ன காரணம்?

பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் கவுன்சில் (டிஏசி) கூட்டம் ஆகஸ்ட் 22-ல் டெல்லியில் நடந்தது. ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தின்போது, முக்கியமான தளவாடங்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் முப்படைகளும் 300 கோடி ரூபாய் எனும் அளவுக்கு ஆயுதங்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காக அமைச்சரவையின் அனுமதி பெற வேண்டியதில்லை என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.

இந்த அனுமதி அடுத்த 6 மாதங்களுக்கு நீடிக்கும். ஒரு வருட காலத்துக்குள் ஆயுதங்கள் தருவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் ஒரே நிபந்தனை. அமைச்சரவையின் அனுமதி இல்லாமல் இதைச் செய்துகொள்ள ராணுவத்துக்குத் தற்காலிக அதிகாரம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சரவையின் அனுமதியுடன் 300 மில்லியன் டாலருக்கு அவசரகால ஆயுத இறக்குமதி செய்துகொள்ளவும் ராணுவத்துக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஜிபிஎஸ் வசதி கொண்ட எக்ஸ்காலிபர் பீரங்கி குண்டுகள், டெர்பி 1 மற்றும் மைக்கா ரக ஏவுகணைகள், ஹெரான் எம்கே2 ட்ரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்களை ராணுவம் வாங்க முடியும்.

சரி, ஆயுதங்களை இத்தனை அவசரமாகக் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளில் நிலவும் சூழல்தான் இந்த முடிவைப் பாதுகாப்புத் துறை எடுக்க முக்கியக் காரணம். எல்லையில் குறிப்பாக, கிழக்கு லடாக் பகுதியில் சீனாவிடமிருந்து அவ்வப்போது சீண்டல்களை எதிர்கொண்டிருக்கும் இந்தியா, அவற்றுக்கு உரிய முறையில் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதையே இந்த முடிவு உணர்த்துகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in