ஆயுஷ் - பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கு வந்த சோதனை: காற்று வாங்கும் கலந்தாய்வு

ஆயுஷ் படிப்பில் குறையும் ஆர்வத்தால் ஆயிரத்துக்கும் மேலான சீட்டுகள் நிரம்பவில்லை
ஆயுஷ் - பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கு வந்த சோதனை: காற்று வாங்கும் கலந்தாய்வு

மாணவர்கள் மத்தியில் ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கு குறையும் ஆர்வம் காரணமாக, முதல் சுற்று கலந்தாய்வின் நிறைவில் ஆயிரத்துக்கும் மேலான இடங்கள் சேர்க்கையின்றி காலியாக நீடிக்கின்றன.

ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி, நேச்சுரோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்களுக்கான ஆயுஷ் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜன.10 அன்று அரும்பாக்கத்தில் உள்ள இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில்தொடங்கி நடைபெற்றது. எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கு இணையானது என்பதுடன், இதில் ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி படிப்புகளில் சேர பெயரளவில் நீட் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே சேர்க்கை நிச்சயம் என்பதாலும், ஆயுஷ் படிப்புகளுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் வரவேற்பு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விண்ணப்பித்தோர் எண்ணிக்கையில் தொடங்கி, கலந்தாய்வில் பங்கேற்போர், சேர்க்கைக்கு விருப்பம் தெரிவிப்போர், படிப்பை தொடர்வோர் என பல நிலைகளிலும் ஏனோ ஆயுஷ் படிப்புக்கு ஆர்வம் குறைந்துள்ளது. குறிப்பாக முந்தைய ஆண்டில் 6 ஆயிரத்துக்கும் மேலானோர் ஆயுஷ் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் நடப்பாண்டு 4 ஆயிரத்து சொச்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இவர்களிலும் எதிர்பார்த்த கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்காத காரணத்தால் சேர்க்கையை மறுத்து கணிசமானோர் திரும்பி சென்றுள்ளனர்.

குறிப்பாக ஆயுஷ் படிப்புகளுக்கான அரசு கல்லூரிகளில் ஓரிரு சீட்டுகள் தவிர்த்து பெரும்பாலான இடங்கள் நிரம்பிய போதும், தனியார் கல்லூரிகள் காற்று வாங்குகின்றன. எனவே தனியார் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, கல்விக் கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் அவற்றுக்கான சேர்க்கையை மாணவர்கள் தரப்பில் விரும்பாது போயிருக்கலாம். இந்த வகையில் அரசு ஒதுக்கீடுக்கான இடங்கள் உட்பட சுமார் ஆயிரத்துக்கும் மேலான சேர்க்கை இடங்கள் இன்னமும் நிரப்பப்படவில்லை.

விரைவில் தொடங்கவிருக்கும் அடுத்த சுற்று கலந்தாய்வில், இந்த காலியிடங்கள் நிரப்பப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தாலும், ஆயுஷ் படிப்புகளின் மீது நம்பிக்கை இல்லாததையே மாணவர் மற்றும் பெற்றோரின் போக்கு காட்டுகிறது. இவர்களில் பெரும்பாலானோர், நீட் நுழைவுத் தேர்வில் எம்பிபிஎஸ் படிப்புக்கு இடம் கிடைக்காதது மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதற்கான நோக்கில் மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராவோர் என்பதாகவே உள்ளனர். இரண்டாம் பட்சத் தேர்வாகவே ஆயுஷ் கலந்தாய்வில் இவர்கள் பங்கேற்பதாலும் ஆயுஷ் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்து காணப்படுகிறது.

ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி, நேச்சுரோபதி உள்ளிட்ட பாரம்பரியமிக்க மருத்துவ படிப்புகளின் மகத்துவம் மற்றும் விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும் இந்த நிலை தொடர்ந்து வருகிறது. அரசு தரப்பில் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டால் மட்டுமே ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை இடங்கள் பூர்த்தியாவதும், பயிற்சி பெற்ற ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி, நேச்சுரோபதி மருத்துவர்கள் நம் மத்தியில் அதிகரிக்கவும், பாரம்பரிய மருத்துவம் காப்பாற்றப்படுவதும் நடக்கும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in