உறவுகளை இழந்து இன்று 18-வது ஆண்டு; மனதில் மறையாத வடு: மக்கள், நண்பர்கள் கண்ணீர் அஞ்சலி

உறவுகளை இழந்து இன்று 18-வது ஆண்டு; மனதில் மறையாத வடு: மக்கள், நண்பர்கள் கண்ணீர் அஞ்சலி

டிசம்பர் 26,  சுனாமி நினைவு தினம். தமிழக கடலோர  மீனவ மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பறித்துச் சென்று அவர்களின்  ஆழ்மனதில் நீங்காத வடுவாக நிலைத்து நின்ற நாள் இன்று. 

2004 -ம் ஆண்டு  டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தை உற்சாகமாக கொண்டாடிய மீனவ மக்கள் மறுநாள் காலை இவ்வளவு சோகத்துடன் விடியும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. 

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு கடல்பகுதியில் அதிகாலையில் ஏற்பட்ட   நிலநடுக்கத்தின் விளைவால் உருவான  சுனாமி அலையால் சுமார் 14 நாடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டாலும் தமிழகத்தில் அது ஏற்படுத்திய பாதிப்பு மிக மிக அதிகம்.

சுமார் 30 மீட்டர்  உயரத்துக்கு எழுந்து தமிழக கரையை அடுத்தடுத்து  தாக்கிய அந்த அலைகளால் சென்னை மெரினாவில் நடைப்பயிற்சிக்குச் சென்றவர்கள் தொடங்கி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி வரையிலும் கடலோர மீனவர்களையும், வேளாங்கண்ணியில் வழிபட வந்தவர்களும் உயிரிழந்தனர். அவர்களின்  ஆயிரக்கணக்கான படகுகள் உள்ளிட்ட  உடமைகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன.

தமிழகத்தில்  10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சென்னையில் 206 பேரும், கடலூரில் 610 பேரும் உயிரிழந்தனர். மேலும் கோடிக்கணக்கான பொருள்கள், இயற்கை வளங்கள், மரங்கள், கால்நடைகள் எனப் பெரும் இழப்பைக் கண்டது தமிழகம். 

சுனாமி பாதிப்பு ஏற்பட்டு இன்றுடன் 18  ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், மக்கள் மனதில் வடு இன்னும் மறையவில்லை.  தமிழகத்தின் கடலோர கிராமங்களில் உயிரிழந்தவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சியினர், மீனவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கடலுக்குள் பாலை ஊற்றியும், பூக்களைத் தூவியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்லாமல் நினைவஞ்சலி செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in