கள்ளச்சாராய பலி 34-ஆக உயர்வு

பிஹார் அரசுக்கு முற்றும் நெருக்கடி
கள்ளச்சாராய பலி 34-ஆக உயர்வு

பிஹார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் இறந்தோர் எண்ணிக்கை இன்று(டிச.15) காலை நிலவரப்படி 34-ஆக உயர்ந்துள்ளது. நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அரசுக்கு இதனால் நெருக்கடியும் முற்றி வருகிறது.

பிஹார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் 2016-ல் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய இந்த அறிவிப்பு, நடைமுறை செயலாக்கத்தில் தொய்வு கண்டது. அரசியல்வாதிகள் - கள்ளச்சாராய வியாபாரிகள் - காவல்துறை கூட்டணியால், அங்கு முறையற்ற வகையில் சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் எதிரொலியாக அவ்வப்போது சாராயத்துக்கு பலியாகும் பொதுமக்களும் அதிகரித்து வருகின்றனர்.

அந்த வகையில் சரண் மாவட்டத்தில் உள்ள மஷாரக் மற்றும் இசுவாபுர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் மத்தியில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடே அதிகரிக்கும் கள்ளச்சாராய விற்பனைக்கும், பலிகளுக்கும் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு லல்லுபிரசாத் யாதவின் ஆர்ஜேடி உடன் சேர்ந்து, ஆட்சியை தொடர்ந்ததில் இருந்து நிதிஷ்குமாருக்கு பாஜகவின் எதிர்ப்பும் சேர்ந்திருக்கிறது. பாஜக எம்பியான சுஷில் குமார் மோடி, ’மதுவிலக்கு அமலான 6 வருடங்களில் பிஹாரில் ஆயிரத்துக்கும் மேலான அப்பாவிகள் உயிரிழந்திருக்கிறார்கள். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தினசரி பல்லாயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டு வருகிறது. ஆனபோதும் அரசால் கள்ளச்சாராயத்தை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. இது நிதிஷ்குமார் அரசின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது’ என்று தாக்கியுள்ளார்.

நேற்றைய கள்ளச்சாராய பலிகள் பிஹார் சட்டமன்றத்திலும், மக்களவை கூட்டத்தொடரிலும் எதிரொலித்திருக்கின்றன. கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சரண் மாவட்ட எஸ்பி-ஐ பணி நீக்கம் செய்யுமாறும் பாஜக எம்பி ஜனார்த்தன் சிங் மக்களவையிக் குரல் எழுப்பினார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிதிஷ்குமார், கேள்வி எழுப்பியவர்களைப் பார்த்து ’நீதான் குடிகாரன்..’ என்று நிதானமிழந்ததும் சர்ச்சைக்கு ஆளானது. இவற்றின் மத்தியில் கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இன்று காலை 34ஆக உயர்ந்தது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in