
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை நடப்பது தெரிந்து அவர்களை பிடிக்கச் சென்ற காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்றுபேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாநகருக்கு உட்பட்ட ரோச் பூங்கா பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். தென்பாகம் சார்பு ஆய்வாளர்கள் கங்கைநாத பாண்டியன், கதிரேசன் உள்ளிட்ட போலீஸார் ஆய்வுப் பணிக்குச் சென்றனர். போலீஸாரைப் பார்த்ததும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். ஆனாலும் போலீஸார் அவர்களை சாதுர்யமாகப் பிடித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த உதயமூர்த்தி, ஸ்டாலின், லிவிங்ஸ்டன் என்பது தெரியவந்தது.
மூவரையும் கைது செய்த போலீஸார் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள், 19 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மூவர் மீதும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களிலும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல் கஞ்சா விற்றக் கும்பல் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.