மரத்தில் தொங்கவிடப்பட்ட சகோதரிகள் உடல்கள்: கடத்திக் கொலைசெய்யப்பட்டதாக தாய் பரபரப்பு குற்றச்சாட்டு!

மரத்தில் தொங்கவிடப்பட்ட சகோதரிகள்  உடல்கள்:  கடத்திக் கொலைசெய்யப்பட்டதாக தாய் பரபரப்பு குற்றச்சாட்டு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரும்புக்காட்டிற்குள் மரத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த அக்கா, தங்கை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டதாக இறந்து போனவர்களின் தாய் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் 17, 15 ஆகிய வயதுடைய இரண்டு சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர்களை அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடத்திச் சென்று கொலை செய்ததாக இறந்தவர்களின் தாய் மாயாதேவி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த லக்கிம்பூர் கேரி மாவட்ட எஸ்பி சஞ்சீவ் சுமன், கூடுதல் எஸ்பி அருண்குமார் சிங் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் சிறுமிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன,

இதுகுறித்து ஏடிஜிபிரசாந்த் குமார் கூறுகையில்,, ” . லக்கிம்பூரில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள மரத்தில் இரண்டு சகோதரிகளின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டன. உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பெண்களின் குடும்பத்தார் அளிக்கும் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும். மற்றும் அனைத்து விதமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

இந்த சம்பவம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “பெண்கள் பாதுகாப்பு குறித்து வெற்றுக் கூற்றுக்களை கூறிய உத்தரப் பிரதேச முதல்வரின் உண்மை தற்போது வெளிப்பட்டிருக்கிறது. யோகி அரசில், குண்டர்கள் தாய்மார்களையும் சகோதரிகளையும் தினமும் துன்புறுத்துகிறார்கள், இது மிகவும் வெட்கக்கேடானது. இந்த விவகாரத்தை அரசு விரைவில் விசாரித்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, இந்த சம்பவம் தொடர்பாக உ.பி.யில் உள்ள பாஜக அரசை கடுமையாகச் சாடியுள்ளார், மேலும் மாநிலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் ஏன் அதிகரித்து வருகின்றன என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இதேபோன்ற 2014-ம் ஆண்டில், உத்தரப் பிரதேசத்தின் படவுன் மாவட்டத்தில் இரண்டு சகோதரிகள் தூக்கிடப்பட்ட சம்பவம் நடைபெற்றது. அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின் தூக்கிலிடப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆனால், போதிய ஆதாரம் இல்லாததால், இருவரும் தற்கொலை செய்துகொண்டதாக சிபிஐ கூறியது. அதே போல சம்பவம் தற்போது மீண்டும் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in