பூட்டிய அறைக்குள் பிணங்கள்: தாய், மனைவி, மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்டாரா பொறியாளர்?

பூட்டிய அறைக்குள் பிணங்கள்: தாய், மனைவி, மகளைக் கொன்று  தற்கொலை செய்து கொண்டாரா பொறியாளர்?

ஹைதராபாத்தில் பூட்டிய வீட்டிற்குள் நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் தர்னாகா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நான்கு வயது பெண் குழந்தை உள்பட 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். விசாரணையில், சென்னையில் ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய பிரதாப் (34), ஹைதராபாத்தில் வங்கி மேலாளராக பணிபுரிந்த அவரது மனைவி சிந்துரா(32), அவர்களின் மகள் ஆத்யா(4), பிரதாப்பின் தாய் ராஜாத்தி ஆகியோர் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது. அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது பிரதாப் மூன்று பேரையும் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கி மேலாளரான சிந்துரா பணிக்கு வங்கியில் இருந்து செல்போனில் வந்த அழைப்புக்குப் பதில் இல்லாத நிலையில், ஊழியர்கள் அவரது வீட்டிற்கு வந்த போது தான், நான்கு பேர் இறந்த விஷயம் வெளியே தெரிய வந்தது. அபார்ட்மென்ட் காவலாளி கதவை உடைத்து பார்த்த போது பிரதாப் உடலையும், படுக்கை அறையில் மற்ற மூன்று பேரின் உடல்களையும் கண்டு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," பிரதாப்புக்கும், சிந்துராவுக்கும் திருமணமாகி எட்டு ஆண்டுகளாகிறது. அவர்கள் இருவரும் முதலில் சென்னையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிந்துரா ஹைதராபாத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் வாடகை வீட்டில் தனது மகள், மாமியாருடன் வசித்து வந்துள்ளார். ஒவ்வொரு வாரமும் பிரதாப் சென்னையில் இருந்து வந்து மனைவி, மகள், தாயைப் பார்த்து விட்டுச் சென்றுள்ளார். பிரதாப் விருப்பப்படி சிந்துரா சென்னைக்கு இடம் மாறுவது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அத்துடன் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிந்துரா சமீப காலமாக மனஉளைச்சலில் இருந்ததாக அவரது சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மனைவி, மகள், தாய் உள்ளிட்ட மூவரைக் கொன்று விட்டு பிரதாப் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பு தான் கொலையா, தற்கொலையா என தெரிய வரும்" என்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in